பக்கம் எண் :

குடியாட்சி181

மிகுந்தவை எனவும் பலவாறாகக் கண்டித்துள்ளனர். ஆனால் இவ்வறிஞர் மனத்திரையில் உலகில் 100க்கு 97 பேர் ஆன சுரண்டப்படும், அறியாமையில் மூழ்கிய ஏழை மக்களை விட, சுரண்டுபவரும் தன்னல மிதுவெனத் தெளிவுபட அறிந்தவரும் ஆன 100க்கு 3 செல்வர்களே மனித உருவில் முனைந்து நிற்கின்றனர் என்று கூறுவது மிகையன்று. உலக மக்கள் 200 கோடிப் பேரில் 6 கோடியளவாக இச் செல்வர் இருப்பதாக வைத்துக் கொண்டால் கூட அவர்கள் குருதி சிந்துவதால் படிப்படியாகக் குற்றுயிருடன் வதைப்படும் 194 கோடிப் பேர் நல் வாழ்வு பெறுவதானால், அக் குருதி ஒரு பொருட்டு அன்று என்பதை அவர்கள் உணர்கிறார்களில்லை. முதலாளி அரசியல்களின் போரில் ஏழை மக்கள் இதனினும் மிகுதியாக இறந்துபட, அவர்கள் குடிகள் வாழவும் வகையற்றுப் போகின்றன என்பதை மறுப்பது இவ்வறிஞர்களுக்கு எளிதான செய்தியாய்விடுகின்றது.

   உலகின் அரசியல்களுள் முன் மாதிரி எதுவுமின்றிப் புதுமுறை வகுத்த உருசிய அரசியலமைப்பில் குறை காண்பது எளிது. ஆனால் அது ஒரு தேர்வுக் காலமுறை என்பதை மறக்கக் கூடாது. அது உலகிற்கு ஒரு படிப்பினை என்பதையும், குருதி சிந்தி உருசியர் காட்டிய இப்படிப்பினையைக் குருதி சிந்தாமலே மற்ற நாடுகள் பின் பற்றக் கூடும் என்பதையும் மறுப்பதற்கில்லை. உலகெங்கும் வளர்ச்சியடைந்து வரும் பொது மக்கள் விழிப்பினிடையே முதலாளித்துவ அறிஞர் புகழும் குடியாட்சி அரசாங்கங்கள் கூட உருசிய அரசியலைப் பின்பற்றி வருவது கண்கூடும். உருசியரின் ஐந்தாண்டு, பத்தாண்டுத் திட்டங்களையும் கோடிக்கணக்கில் பொருள் குவிக்கும்