பக்கம் எண் :

182குடியாட்சி

திட்டங்களையும் ஏளனச் சிரிப்புடன் கேலி செய்த அறிஞர்கள் இப்போது ஆயிரக்கோடிக் கணக்கில் நாலாண்டுத் திட்டமும் இருபதாண்டுத் திட்டமும் வகுத்து ஒருவருக்கொருவர் போட்டியிடத் தொடங்கியிருக்கின்றனர். ஆயினும் உருசிய முறையைக் குறைகூறியவர்கள் அதன் புதிய நடைமுறைகளைப் பின்பற்றத் துணிந்தனரேயன்றி அதன் அடிப்படைத் தத்துவத்தைப் பின்பற்ற இன்னும் துணிவுகொள்ளா திருக்கின்றனர். இதற்குத் தடை அறிவன்று அன்பின்மை; பொதுநல ஆர்வமன்று, உள்ளார்ந்த தன்னலம் என்பது உற்றறிபவர்களுக்கு வெளிப்படையேயாகும்.

   உருசிய அரசியலமைப்பைப்பற்றிக் கூறுமுன் அதற்குத் தாயகமாயிருந்த கார்ல்மார்க்ஸ் கோட்பாடுகளைப் பற்றிச் சிறிது கூறுதல் வேண்டும். உருசியப் புரட்சியுடன் பலவகையில் ஒப்புடையதாய் அதற்குப் பலவகையில் முன்மாதிரியாயிருந்தது ஃபிரஞ்சுப் புரட்சி. அப் புரட்சியும் புது உலகையே அமைக்க முயன்றது. ஆனால் பொருளியலடிப்படையை மாற்றாமல் அரசியலமைக்க முயன்றதனாலேயே அது வீழ்ச்சியடைந்தது. மேலும் இப்புரட்சி பொதுமக்கள் அல்லது தொழிலாளர் புரட்சி என்று கண்டதுமே, செல்வர்களோடு செல்வாக்கு மிக்க உலகின் மற்ற அரசியல்கள் ஒன்றுபட்டு இப்புரட்சியை அடக்கவும் இப்புரட்சி மற்ற நாடுகளில் பரவாமல் தடுக்கவும் முன்வந்தன.

   உலகின் முதலாளிகளனைவரும் ஒன்றுபட்டுத் தம் அரசியல்களைத் தொழிலாளர் மீது ஏவுவது கண்ட கார்ல்மார்க்ஸ் என்ற செர்மன் பேரறிஞர் உலகில் உள்ள தொழிலாளர் எல்லோரும் ஒன்றுபட்டால்தான் முன்பே அமைக்