பற்று என்ற உள்வலிமையாலும் ஆரியரிடையே சுரண்டுதல் கொள்கையுடைய முதலாளிகளுடன் ஒத்துழைப்பதாலும் மட்டுமே இன்று அது ஆரிய இனத்துடன் கலந்துறவாட முடிகிறது. கலைவகையிலும் சமயவகையிலும் அறிவியல் நாகரிக வகைகளிலும் கூட ஆரிய இனத்துக்கும் உயிரூட்டிய இனம் செமித்திய இனமாகும். இன்று ஆரியரிடையே பெரும்பான்மையாகப் பரவிய சமயம் கிறித்தவசமயமே. இக்கிறித்துவ சமயமும் இதனுடன் சரிநிகராக உலகசமயமாய் இயங்கும் இஸ்லாம் சமயமும் இரண்டும் செமித்தியரிடைத் தோன்றியவையே. பின்னது இன்றும் செமித்திய வழியினரைத்தான் பெரும்பான்மை தழுவி வளர்கின்றது. மூன்றாவது உலகசமயமாகிய புத்தசமயமும் இந்தியாவில் சிறுபான்மைச் சமயமான சமணமும் ஆரியர் உறவாலோ உறவுக்குப் புறம்பாகவோ திராவிடரிடைத் தோன்றிய ஆரிய எதிர்ப்புச் சமயங்களேயாம். முதன் மூன்று சமயங்களுக்கடுத்த நாலாவது பெருஞ்சமயமாகக் கருதப்படும் இந்து சமயம்கூடப் பெரும்பாலும் திராவிடர்களது பழைய சிவநெறி திருமால் நெறிகளின் புதுப் பூச்சேயாகும். திராவிடர் செமித்திய இனத்துடன் தொடர்புடையவர் என்று எண்ண இடமுண்டு என்று மேலே கூறியிருக்கிறோம். இக்கருத்து மொகெஞ்சதரோப் புதைபொருளாராய்ச்சியால் வலியுற்று வருகிறது. மேலாராய்ச்சிகளால் இன்னும் வலியுறலாம். செமித்திய இனம் திராவிட இனத்துடன் உறவுடையது என்று மட்டுமன்றித் திராவிட இனத்தினின்று கிளைத்த இனமே என்று கூடத் தெளிவாக இனித் தெரியவரக்கூடும். அங்ஙனமாயின் (செமித்திய இனமுட்பட்ட) திராவிட இனமே உல |