எனப்படும். இம்முறையில் அரசியலுரிமை மட்டுமன்றி சொத்தும், உடைமையும் அனைவருக்கும் சரிநிகராக்கப்படுவன. உலகில் இன்று பொதுஉடைமை அரசாங்கம் முழுக்க அமைந்துள்ள நாடு உருசிய நாடு (Russia) ஒன்றே. அது மக்களுக்குப் புதுமுறை வகுத்து முன் செல்கின்றது. அதன் நன்மை தீமைகள் பிறநாடுகளுக்குப் படிப்பினையாகும். இதுகாறும் கூறியவாற்றால் ஆட்சிகள் மூவகையாவதைக் காணலாம். ஒன்று முடியாட்சி, மற்றொன்று குடியாட்சி. இரண்டும் தனிஉடைமை முறையின் பாகுபாடுகள். மூன்றாவது இவற்றுக் கெதிரான பொதுஉடைமை ஆட்சி. முடியாட்சி முழு உருவில் வளர்ச்சியடைந்து முதிர்ந்தது ஆரியரல்லாதாரிடையே தான். ஆனால் அதன் தோற்ற வளர்ச்சிகளை அவர்களிடையே காண முடியவில்லை. முதிர்ச்சியை மட்டுமே காணமுடிகிறது. ஆரியரிடையே குடியாட்சி முடியாட்சி இரண்டின் தோற்றத்தையும் காண்கிறோம். ஆனால் முடியாட்சி மட்டுமே நெடுநாள் ஆரியரல்லாத நாகரிகங்களின் முன் மாதிரியைத் துணைக்கொண்டு வளாச்ச்சியடைந்தது. குடியாட்சியின் வளர்ச்சி பெரிதும் பிரிட்டனின் அரசியலிலேயே காணக் கிடக்கிறது. இன்று குடியாட்சி நிலவும் நாடுகளில் பலவும் பிரிட்டனையே அரசியல் வகையில் தாயகமாகக் கொண்டன. கடைசி ஆட்சிமுறையாகிய பொதுஉடைமை ஆட்சிக் கருத்து செர்மனியில் தோன்றியதாயினும் அது முற்றிலும் வளர்ச்சியடைந்து வருவது உருசியாவில்தான். |