பக்கம் எண் :

34குடியாட்சி

முடியரசு நிறுவப்பட்டது. செர்மானியர் டேனியர் முதலியவர்கள் நாடோடிகளாகவும் கடற்கொள்ளைக் கூட்டத்தினராகவும் இருந்தபோதெல்லாம் குலமுதல்வர்களின் வலிமை மிக்கவர்கள் படிப்படியாய் உயர்வு பெற்றனர். அவர்கள் இங்கிலாந்து முதலிய இடங்களில் குடியேறிய பின்தான் இம்முதல்வர் முடியரசராகமாறினர் என்று தெரிகிறது. 

   ஆனால் ஆரியரிடையேதான் இங்ஙனம் கிட்டத்தட்ட கி. மு. 1000-ல் முடியரசு ஏற்பட்டது என்று கூற முடிகின்றது. ஆரியரல்லாத மக்களிடையே நாம் அறிந்தவரை தொடக்க காலமுதற்கெண்டு மன்னராட்சியே யிருந்து வருவதால் எப்போது முடியாட்சி தோன்றிற்று என்று கூறமுடியவில்லை. ஆயினும் இங்கும் மக்கள் மிகத்தொலைவு மிக்க பண்டைக் காலத்தே ஆரியரைப்போல நாடோடிகளாயிருந்து குலமுதல்வர்களை வகுத்துப் பின் அவர்களையே மன்னராகக் கொண்டிருக்கக் கூடும் என்று எண்ண இடமுண்டு. ஏனெனில் விவிலிய நூலில் கண்ட வரலாற்றின்படி எகிப்து நாட்டில் தலைவரற்று அடிமைகளாயிருந்த எபிரேயர் அங்கிருந்து மோசே தலைமையில் செங்கடலைத் தாண்டிப் பாலத்தீனம் புகுந்ததாகவும் அங்ஙனம் தலைவராக அல்லது குல முதல்வராகவந்த மோசே வழியே பின்னர் மன்னர் வழியாயிற்று என்றும் அறிகிறோம். அவர்களுடன் தொடர்புடைய அராபிய மக்கள் முகமது காலத்திலும் இன்றளவும் கூட நாடோடிகளாகவும் குல முதல்வர்கள் ஆட்சியுட்பட்டவர்களாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. முகமது நபிநாயகத்துக்குப்பின் சில நூற்றாண்டுகள் அராபியர் ஒரு குடைக் கீழ்ப்பட்டிருந்தனர். பின் துருக்கியராட்சியால் அராபியரும் துருக்கி