துண்டு. திராவிடமன்னர் ஆட்சியும் செமிட்டியமன்னர் ஆட்சியும் பிற ஆரியரல்லாத மன்னர் ஆட்சியும் பெரும்பாலும் இங்ஙனம் முடியரசு என்ற வெளிப்போர்வை போர்த்த சமயத்தலைவர் அல்லது குருமார் ஆட்சியாகவே இருந்தன என்று கொள்ள இடமுண்டு. பிற்காலத் தமிழ் மன்னர் ஆட்சியும், அண்மைக்கால தற்கால இந்து மன்னர் ஆட்சிகளும் கூட ஒரளவு இந்நிலையிலிருந்து மாறவில்லை என்று காணலாம். திருவாங்கூர் மன்னர் இன்றும் நாட்டுத்தெய்வத்தின் பெயரால் அத்தெய்வத்தின் அர்ச்சகர் அடிபணிந்து ஆளுதல் குறிப்பிடத்தக்கது. புராண இதிகாச காலங்களில் இவ்வாட்சியையே ஆரியர் வயப்பட்ட குருமார் இராமராச்சியம் எனப் புனைந்து கூறினர். கிரேக்கரிடையே ஸ்பார்ட்டா நகர் முடியாட்சியிலேயே நின்று விட்டதாயினும் இருமன்னர் ஆட்சியை ஏற்றது. அதென்ஸ் நகரம் படிப்படியாக முடியாட்சியினின்று வல்லாட்சிக்குமாறி அதினின்றும் குடியாட்சியாக விளைவுற்றது. கிளீஸ்தெனிஸ் என்ற தலைவன் காலத்தில் அது நிறைகுடியாட்சியாயிற்று. அஃதாவது நகரத்தான் ஒவ்வொருவனுக்கும் சரிஒப்பான் ஆட்சியுரிமை தரப்பட்டது. ஆட்சியெல்லை அதேனிய நகர அளவில் இருக்கும்வரை இஃது ஒரளவு நன்கு நடைபெற்றதாயினும் அவ்வெல்லை விரிந்து பேரரசானபோது அது வளர்ச்சியற்றுப் போயிற்று. மேலும் அதேனிய நகரத்திலும் ஒரு சிறுபான்மை மக்களே--ஆரியவகுப்பினரே--நகரத்தார் உரிமைபெற்றனர் என்பதை மேலே குறிப்பிட்டிருக்கிறோம். |