4. பண்டைத் தமிழ் நாட்டு வடநாட்டு அரசியல் முறைகள் ஆரியர் வருவதற்கு முன்னரே திராவிடர் நாகரிகத்திலும் அரசியல் முறையிலும் அவர்களைவிட நெடுந் தொலைவு முன்னேறியிருந்தனர். ஆரியர் ஆடுமாடுகளை மேய்த்துத் திரிந்து முல்லை நிலவாழ்வு வாழ்ந்த காலத்திலேயே தமிழ் மக்களிடையே குறிஞ்சி அல்லது மலை நாட்டு நாகரிகம், முல்லை அல்லது காடுசார்ந்த இடைக்குல வாழ்வு ஆகியவற்றுடன் மருத நிலவாழ்வாகிய நாடுநகர வாழ்வும் நெய்தல் நிலவாழ்வாகிய உள்நாட்டு வெளிநாட்டு வாணிபம் நிறைந்த பட்டின வாழ்வும் மல்கி விளங்கின. உழவும் கைத்தொழில்களும் கலைகளும் அவர்களிடையே செழித்தோங்கின. சிந்து ஆற்றங்கரையோரம் அகழ்ந்தெடுக்கப்பட்டு வரும் ஹரப்பா, மோகஞ்சதரோ நகரங்களிற் கண்டபடி இவர் 5000 ஆண்டுகட்கு முன்னரே பிற ஆரியரல்லாத மக்களாகிய எகிப்தியர், சாலடியர், அசிரியர் முதலியவருக்கு ஒப்பாகவும் சில வகைகளில் அவரினும் மேம்பட்டும் விளங்கினர். நில அகழ்வாராய்ச்சி இன்னும் முனைந்து நடைபெறும் தோறும் இவற்றைப்பற்றி இன்னும் விளக்கமாகவும் விரிவாகவும் பல உண்மைகளை நாம் அறிதல் கூடும். தமிழருக்கு இன்று கிடைத்துள்ள மிகப் பழைய நூல்கள் தொல்காப்பியமும் புறநானூற்றின் சில பகுதிகளும் அவற்றுக் கடுத்தபடி திருக்குறளுமே யாகும் |