பக்கம் எண் :

குடியாட்சி43

தொல்காப்பியத்தின் பாயிரத்தில் தொல்காப்பியர் வடமொழி ஐந்திர இலக்கண நூல் பயின்றவராகச் சிறப்பிக்கப் படுகின்றார். தமிழில் தொல்காப்பியம் சிறப்புற்றபின் மற்ற இலக்கண நூல்கள் புகழ்மங்கி ஒழிந்தன போல; ஐந்திரமும், பாணினீயம் சிறப்புற்றபின் புகழ் மங்கி யழிந்த ஒரு நூலாகும். ஆகவே தொல்காப்பியம் பாணினீயத்துக்கு முந்தியதென்று கொள்ளலாம். அஃதோடு கி.மு. முதலாவது இரண்டாவது நூற்றாண்டின் பின் வளர்ச்சி பெற்ற புதிய செறிவுமிக்க சூத்திர நடைவழக்கிற்கு வருமுன் நிலவிய நெகிழ்ச்சியும் இனிமையுமுடைய சூத்திர நடையே தொல்காப்பியத்தில் காணப்படுகிறது. இவற்றை நோக்கத் தொல்காப்பியர் காலம் கி. மு. 500 - க்குப் பிந்தியதாக இருக்க முடியாது. புறநானூற்றின் பல பாட்டுக்கள் இதனினும் முந்தியன என்பதில் அயமில்லை. திருக்குறளின் காலம் கி.பி. முதல் நூற்றுாண்டிடெனக் கொள்ளப்படுகின்றது. 

   தோல்காப்பியர் கூறிய ஐந்திணை ஒழுக்கம் அவர் காலத்தாகவோ அல்லது அதனினும் முற்பட்டதாகவே இருத்திருக்கவேண்டும். அதன் கோட்பாடுகள் வரை யறுக்கப்பட்டு விரிவடைந்திருப்பதை நோக்க அது மிகவும் முற்பட்டதென்று கூறலே சால்பு உடையது. பிற்கால இலக்கண இலக்கிய நூல்களும் இதே ஒழுக்கத்தை மேற்கொண்டு புனைந்து கூறுகின்றனவாயினும் அவை அக்காலத்தில் காணப்பட்ட ஒழுக்கத்தைக் கூறுபவை அல்ல; மரபு பற்றி விரித்துரைக்கப் பட்டனவேயாகும் என்று கூறலாம். அவை வளர்ச்சியற்றும் நாளடைவில் வழக்காறற்றும் போனதே இதனை நன்கு எடுத்துக்காட்டும்.