தொல்காப்பியர் காலத்திலும் புறநானூற்றுக் காலத்திலும் முடியுடை வேந்தர் மூவரும் ஆண்டதாகக் காணப்படினும், அவர் ஆண்ட இடம் கூடியும் குறைந்தும் சில காலம் ஒன்றில் ஒன்று முற்றினும் மறைந்தும் இருந்தன என்று தெரியவருகிறது. ஆயினும் இவ்வரசர் நேரிடையாகத் தம்நாடு முற்றும் தாமே ஆண்டனர் என்று தோற்றவில்லை. நாட்டின் ஆட்சி பெரும்பாலும் குறுநில மன்னர்தம் கையிலேயே இருந்தது. குறுநில மன்னர் தம் போர் வீரத்தின் பலனாய் அவ்வப்போது அவாக்ளை அடக்தித் தம் ஆற்றலை நிறுவி அவர்களிடமிருந்து வணக்கமும் திறையும் கொண்டதுடன் நின்று விட்டனர். இத்திறை மன்னர் பின்னாட்களில் குடிகளிடமிருந்து நேராகவும் பணியாட்கள் வாயிலாகவும் ஒழுங்காகக் கொண்ட இறை, அல்லது வரி அன்று. பெருநில மன்னரின் தலைமையை மேற்கொண்ட குறுநில மன்னர் அவர்கள் பெயரைத் தம் பெயருடன் சேரச் சூட்டிக் கொண்டனர். அவர்கள் கொடி பூ முதலியவற்றையும் மேற்கொண்டு அவர்கள் போர்க்கெழுந்தபோது தாமும் தம் வீரருடனும் படைக்கலங்களுடனும் சென்று போரிட்டனர். இக்குறுநில மன்னராட்சி கிரேக்க நகராட்சியுடனும் இங்கிலாந்து முதலிய மேலை நாடுகளில் கி.பி. 1000-த்தை ஒட்டி நிலவிய நிலஉடைமை ஆட்சியுடனும் (Feudalism) ஒரு சார் ஒப்புடையது. தொல்காப்பியத்திலும் புறநானூற்றிலும் விதந்து கூறப்படும் புறத்திணை யொழுங்கு பெரும்பாலும் இக்குறுநில மன்னர் ஒருவருடன் ஒருவர் மாறிட்டுப் போராடிய போராட்டங்கள் பற்றியவையே யாகும். வெற்றி நாடிய மன்னர் மாற்றரசர் நாட்டின் நிரை (பசுக்கூட்டத்தைக் கவர்ந்தனர். தும்பை மலர் சூடிப் போர்க் கெழுந்தனர். |