பக்கம் எண் :

குடியாட்சி45

   மற்றரசர்கள் போர்களத்தி லெதிர்த்தும் புரிசைகள் (கோட்டைகள்) உள்ளிருந்தும் நொச்சிமலர் சூடிப் போரிட்டனர். வெற்றியடைந்த மன்னன் எதிரியின் நாட்டைச் சூறையாடியும் அவன் நிலத்தைக் கழுதை பூட்டிய ஏராலுழுது பாழ்படுத்தியும் தோற்றவன் கொடி முதலிய குறிகளைப் பறித்தும் வாகைசூடி மீண்டனன். சிற்சில சமயம் வெற்றிகொண்ட மன்னர் பகைநாட்டில் தன் ஆட்களை மன்னராக்கியும் பகைவர் குடியில் வந்த ஓர் இளவரசனைத் தன் கீழாளும்படி முடிசூட்டியும் மீள்வதுண்டு.

   கடைச்சங்க காலத்தில் (கி.பி. 1-முதல் 3-ம் நூற்றாண்டு வரை) பல குறுநில மன்னர் பெருநில மன்னரை ஒத்த செல்வமும் அவரை எதிர்க்கும் ஆற்றலும் கொண்டு விளங்கினர். இவர்களுள் பாரி, ஓரி, காரி, மலையன், அதியமான் முதலிய பலர் சிறப்புக்கள் புறநானூற்றிலும் மற்றச் சங்க நூற்களிலும் காணப்படுகின்றன. பெருநில மன்னராகிய சேர சோழ பாண்டியர்கள் அவ்வப்போது அவர்களை அடக்கியாண்டதுடன் ஒரோ வழித் தம்முள் மற்ற இருவரையும் கூட ஒடுக்கித் தமிழ் நாட்டில் பேரரசராக விளங்கினர். அத்தகையோருள் முதற் கரிகால் சோழன், சேரன் நெடுஞ்சேரலாதன் முதலியோர் பழைமை மிக்கவர்கள். இவர்களைப் பின்பற்றி வந்தவர்களே பாண்டியன் சமயாகீர்த்தி என்னும் வடிம்பலம்ப நின்ற பாண்டியன், இரண்டாம் கரிகாலன், சேரன் செங்குட்டுவன் முதலிய பெரும் பேரரசர்கள் ஆவர். இவர்களில் பலர் தமிழ்நாட்டுடன் அமையாது வடநாடு, சீயம், சாவகம் முதலிய தொலை நாடுகளிலும் தம் சீர்த்தியைப் பரப்பினர்.