இவர்களுள் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் கி.மு. 500-ல் சாவகத்தீவில் தன் ஆட்சியையே நிறுவித் தன் அடிகளை அந்நாட்டில் அலைதவழும் பாறை ஒன்றில் பதிப்பித்து அதற்குத் திருமுழுக்கு வழிபாடு செய்வித்தான். இதனைத் தமிழ் நூல்கள் கூறுவதுமட்டுமன்றி, சாவக நாட்டுக் கல்வெட்டுகளும் இதற்குச் சான்று பகர்கின்றன. அந்நாட்டில் அவன் ஏற்படுத்திய வழக்கம் இன்றளவும் நிலைபெறுகின்றது. அஃதோடு அந்நாட்டின் நகரங்களும் இன்றளவும் தமிழ்நாட்டு நகர்களாகிய மதுரை, கொற்கை ஆகிய பெயர்களையே கொண்டு திகழ்கின்றன. இவ்வரசனே யன்றிப் பின்னும் கரிகாலன் இமயத்தில் தன் புலிக்கொடி பொறிப்பித்ததும் சேரன் செங்குட்டுவன் வடவரசரை வென்று கண்ணகி உருவெடுப்பித்துக் கொணர்ந்ததும், ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன் படையெடுத்துவந்த வடவர் படையை வென்றதும் தமிழ்நாட்டில் இப்பெருமன்னர் அடைந்த பெரும்பேரரசின் பயனாக எழுந்த செயல்களே யாகும். ஆயினும் தமிழரசர் வெற்றிகளெல்லால்தனி மனிதர் போர் வெற்றியின் பயனாக எழுந்தனவேயன்றி நாடு பிடித்தாளும் அவாவினால் எழாமையினால் அவை நாட்டு வெற்றிகளாகவோ, நாட்டை விரிவுபடுத்தி ஒற்றுமைப்படுத்தும் நிலைபெற்ற வெற்றிகளாகவோ விளங்கவில்லை. பிடித்த நாட்டைத் தம் கீழுள்ள வீரருக்கோ முன்னைய அரசருக்கோ மீட்டும் கொடுத்துவிட்டு அவர்கள் திரும்பினர். அவர்கள் வாள்வலி குன்றியவுடன் அவ்வெற்றியும் மறைந்தது. எனவே (பெருஞ்சோழர் காலமாகிய கி.பி. 1000வரை) விரிந்த நாட்டை நேரிடையாக ஆளும் நிலை தமிழகத்தில் வேண்டப்படாது போயிற்று. விரிவான ஆட்சிக்கட்டுப்பா |