முதலிய அக்காலத்திய நூல்கள் குறிப்பிடுகின்றன. "வான் நோக்கி வாழும் உலகெல்லாம், மன்னவன், கோல் நோக்கிவாழும் குடி" என்றும் "மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை, அஃதின்றேல், மன்னாவாம் மன்னர்க்கு ஒளி" என்றும் திருவள்ளுவர் குறிப்பிடுதல் கவனிக்கத்தக்கது. குடிகளைப் புரந்து செழுமை யூட்டி அவர்கள் செல்வத்தின் ஒரு பகுதியை இறையாகக் கொள்வதற்கு மாறாக வலி யுறுத்தி இறைகொள்ளுதல் வழிப்பறிக் கொள்ளையுடன் ஒக்கும் என்றும் கூறப்படுகின்றது. தமிழ் நாட்டில் மக்கள் விரும்பிய ஆட்சி வரையறைப்பட்ட அல்லது பொறுப்புள்ள மன்னர் ஆட்சி எனப்படுவதாகும். ஏனெனில் மன்னன் எப்போதும் அமைச்சர் சொல்லுக்கும் சுற்றம் அல்லது எண்பேராயத்தின் அறிவுரைக்கும் கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்றே கருதப்பட்டது. இவ்வமைச்சரும் சுற்றம் அல்லது அறப்பேரவையினரும் மன்னர் மகிழ நடக்கவேண்டுபவர் அல்லர், வேண்டும்போது மன்னரை இடித்துக் கூறித் திருத்தும் பொறுப்பை உடையவர். மன்னன் பொறுப்பறிந்த நல்லரசனாயின் அவர்களை அடக்கியோ மீறியோ நடவாமல் அவர்கள் கடமையும் தன் பொறுப்பு மறிந்து திருந்துவான். அன்றேல் அவன் ஆட்சி கொடுங்கோல் ஆட்சியாகும், மக்களும் அறிஞரும் அதனை வெறுப்பர், சிலசமயம் அவர்கள் புரட்சிசெய்து மன்னனை அழிப்பர். ஒரோவழிக் கொடுங்கோலன் ஆற்றலுடையவனாய்விட்டால் குடிகள் கொடுங்கோலனாளும் நாட்டிலும் காடே நன்று எனக் கொண்டு ஓடிக் காடடைவதும் உண்டு. இதனாலேயே "கொடுங்கோல் மன்னன் வாழும் நாட்டில், கடும்புலி வாழும் காடு நன்றே" என்ற மூதுரை எழுந்தது. |