ஆனால் செங்கோலானாவதும் கொடுங்கோலனாவதும் மக்கள் செயலல்ல, இறைவன்செயலென்று அந்நாளைய மக்கள் கொண்டனர் என்பது தெளிவு. அவ்வப்போது அமைச்சர், படைத்தலைவர், பெருங்குடிகள் சேர்ந்து கொடுங்கோலனை வீழ்த்தி வேறு அரசனை அமைப்பினும் இம்முறை ஓர் ஒழுங்குமுறையாகக் கொள்ளப்படவில்லை. மன்னன் கடவுள் நிலையில் உள்ளவன் என்ற எண்ணமே இதற்குக் காரணம். திருவள்ளுவனாரும் இக்கருத்தையே மேற்கொண்டு "முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு, இறையென்று வைக்கப்படும்" என்று கூறினர். இங்கிலாந்தில் 17-ம் நூற்றாண்டுவரையிலும் ஃபிரஞ்சுநாட்டில் 18-ம் நூற்றாண்டுவரையிலும் உருசிய நாட்டில் 19, 20-ம் நூற்றாண்டுவரையிலும் கூட இக்கருத்து மன்னரிடையேயும் மன்னரைச் சார்ந்தொழுகியவர்களிடையேயும் நிலவி வந்தது. ஆயினும் மேனாடுகளில் மக்கள் இக்கருத்துக்கு நெடுநாள் குருட்டுத்தனமாக அடிமைப்பட்டிராமல் அரசியலுரிமையைத் தாங்களே கைக்கொண்டு வரையறைப்பட்ட மன்னர் ஆட்சியையும் குடியாட்சி வகைகளையும் நாளடைவில் அமைத்தனர். தமிழ்நாட்டில் கருத்தளவில் மணலிடை நுண்ணிய பொன்பொடி போலக் காணப்படும் இக்கருத்து அதற்குமேல் வளம்பட்டு வளராது போயிற்று. ‘குடியுயரக் கோனுயரும்’ என்ற ஒளவையார் மூதுரையில் குடிவழியே கோன் உயர்வு பெறுவன் என்ற உண்மை பொதிந்து கிடப்பினும், பிற்காலத்தில் ‘அரசனெவ்வழி அவ்வழி குடிகள்’ என்ற எண்ணமே மேலிட்டு அரசியல் வளர்ச்சியைத் தடைப்படுத்திற்று. நாட்டு வாழ்வும் நல்லரசர், தீயரசர், வல்லரசர், புல்லரசர் ஆகியவர் கைப்பட்டுத் தொடர்ச்சியும் ஆக்கமும் அற்ற சீர்குலைவு வாழ்க்கையாயிற்று. |