பக்கம் எண் :

50குடியாட்சி

   5-ம் நூற்றாண்டு முதல் 10-ம் நூற்றாண்டளவும் தமிழ் நாட்டில் பாண்டியரும் பல்லவரும் பேரரசு செலுத்தினர். 10-முதல் 12-ம் நூற்றாண்டுவரைத் தஞ்சைப் பெருஞ்சோழர் தமிழ்நாடு முற்றிலும் ஒரு குடைக்கீழ்க்கொண்டு வந்ததுடன் முதற்காலத் தமிழரசர் சுவட்டைப் பின்பற்றிக் கங்கைநாடும் கடாரநாடும் (பர்மா) பொன்னாடும் (சாவகம்) ஈழநாடும் (இலங்கை) வென்று இந்தியாவிலேயே பேரரசராக விளங்கினர். முதற்காலப் பேரரசர் வெற்றிகள் போலவே இவ்வெற்றிகளும் அரசியல் விரிவை உண்டு பண்ணவில்லை. ஆனால் தென்னாட்டளவில் அவர்கள் பரந்த ஆட்சி செலுத்தினர். அவ்வாட்சியில் பழைய குறுநில மன்னராட்சி மங்கினும் முற்றிலும் வலியிழக்கவில்லை. அவை நகராண்மை, ஊராண்மை ஆட்சிகட்கு வளந்தந்தன. இவ்வூராண்மையாட்சி மன்னர் முடி மாறினும் மாறாத நிலைபேறுடையதாக ஆங்கில ஆட்சிக் காலம்வரை மாறாதிருந்தது. வடநாட்டு மன்னவரும் இவ்வாட்சிமுறையை மேற்கொண்டு இதனை இந்தியப் பெருநிலப்பரப்பின் பொது நல உரிமைகளுள் ஒன்றாக்கினர். ஆனால் தமிழர் பேரரசு பேரிலக்கியத்தையும் பெருங்கோயில் குளங்களையும் தந்து வேறு நிலையான பயன்தராது மறைந்தது.

   வடநாட்டில் பழங்கால இலக்கியத்தில் காணப்படும் கருத்துக்கள் பெரும்பாலும் திருக்குறளிற் காணப்படும் கருத்துக்களே. வடநாட்டில் அரசியலுக்கும் அரசியல் கருத்துக்களுக்கும் முதல் நூலாய் விளங்கியது சாணக்கியர் அல்லது கௌடில்யரின் பொருள் நூலே (அர்த்தசாத்திரமே)யாகும். சாணக்கியர் தென்னாட்டினர் என்ற மரபுரையை மேலே குறிப்பிட்டிருக்கிறோம்.