அவர் நேராட்சிக்கு இடம் தரும் சிறு பகுதியாகவே இருந்தது. நாட்டின் ஆட்சி முறையில் மன்னனே போரில் படைத் தலைவனாகவும் அமைதிக் காலத்தில் முறைத்தலைவனாகவும் (Judge) இருந்ததன்றிச் சமயவினைகளில் வேள்வித் தலைவனாகவும், (Head Priest) அமைந்து நின்றான். கிறித்தவ சமயம் தோன்றிய பின் இறுதிக் கடமை விலகினும் பிற்கால அரசியல் வளர்ச்சியில் அரசனே நாட்டு மக்கள் சமயத்திலும் முழுமுதல்தலைவன் என்ற எண்ணம் மீண்டும் ஏற்பட்டு 16-ம் நூற்றாண்டில் சீர்திருத்த சமய இயக்கத்துடன் (Protestant Reformation) இணைந்து விட்டதென்பது கூர்ந்து கவனிக்கத்தக்கது. மன்னருக்கு ஆட்சிமுறையில் உதவியவர் அவன் கீழ்ப்பட்ட பிற குல முதலவரும் போரில் திறங்காட்டியவர் படைத் தலைவரும் ஆவர். ஆயினும் அவ்வப்போது குடி மக்கள் அனைவரும் அடங்கிய பேரவை ஒன்றும் இருந்ததெனக் கூறப்படுகிறது. குடிமக்கள் அனைவரும் அரசியல் மன்றத்துக்கு வர முடியாது என்பது கூறாமலே அமையும். ஆயினும் அக்காலத்தில் உண்மையில் குடிமக்கள் என்றழைக்கப்பட்டவர்கள் போர் வீரர்களே அவர்களிலும் அரசர் வாழ்ந்த பகுதிக்கு அண்மையிலுள்ளவர்களும் செல்வாக்குடைய பெருமக்களும் மட்டுமே தம் உரிமையை உண்மையில் செயல் முறையில் பயன்படுத்தியிருப்பார்கள் என்று எண்ணுவது தவறாகாது இத்தகைய பேரவைக்கு அக்காலத்தில் கொடுக்கப்பட்ட பெயர் விட்டெனா-யெமோட் (அறிஞர் பேரவை) என்பதே. இப்பேரவையேயன்றி மாவட்டந்தோறும் (Shire) வட்டந்தோறும் (hundred) ஊர்தோறும் (town) சிற்றவைகளும் இருந்து ஆட்சி நடத்தின. அவை மாவட்டம் |