அவை (Shire moot) வட்ட அவை (hundred moot) ஊரவை (Town moot) எனப் பெயர் பெற்றன. பெயரளவில் இப்பேரவையின் ஆற்றல்கள் எல்லையற்றன. இன்றைய ஆங்கில அரசியல் மன்றத்தின் ஆற்றல்களுக்குக்கூட அவை இணையென்னலாம். ஆனால் செயலளவில் இவ்வாற்றல்கள் பயனற்றவையாயிருந்தன. இவற்றுக்குக் காரணம் அதன் அமைப்பு, குறுகிய காலவரையறை, மக்கள் பொறுப்பு உணராமை, பொது மக்கள் விழிப்பின்மை ஆகியவைகளே. அமைப்பு வகையில் பெயரளவில் குடிமக்கள் அனைவரும் வரலாமாயிலும்; தொலைவிலுள்ளவர்களும் தம் செலவில் வர முடியாத எளிய மக்களும் அதிற்கலக்க முடிவதில்லை. ஆளும் பொறுப்பில் பொது மக்களும் அக்கரை கொள்ளவில்லை. மேலும் இப்பேரவை நிலையான அவையுமன்று, நெடுநாள் நிலைபெறுவது மன்று. பெரும்பாலும் புதுவரிகள் சுமத்தும் போதுதான் அவை அமைக்கப்படும். அது வழங்கப்பட்டதும் அதனைக் கூட்டிய மன்னரே அதனைக் கலைத்து விடுவர். பேரவைக்கு வந்தவர்களில் பெரும்பாலோர் தம் வேலையை விட்டு அவையில் பங்கு கொண்டு உழைப்பதை ஒரு சுமையாகவே கருதினதால் நெடுநாள் தங்க விரும்பாமல் விரைந்து போவதிலேயே கண்ணும் கருத்துமாயிருந்தனர். அரசியலில் பங்கு கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் அக்காலம் பொதுமக்களிடையில்லை. எனவே பெரும்பாலும் ஆட்சி, மன்னர் மனம் போலவே நடந்து வந்தது. மன்னன் வலி குன்றியவனாயிருந்த காலத்தும் கூட அவன் ஆட்சியைக் கட்டுப்படுத்தியவர் தலைமைப் பெருமக்கள் சிலர் மட்டுமே. |