நார்மானிய அரசர் ஆட்சித் தொடக்கத்துடன் கரு நிலைக்காலம் முடிவுற்று உயிர்ப்புக் காலம் தொடங்குகிறது. இது 1066-ல் நார்மானிய ஆட்சியுடன் தொடங்கி அதன் பின் ஆண்ட பிளன்டாஜெனட் கால்வழியின் ஆட்சிக் காலத்துடன், அஃதாவது 1399-ல் முடிவடைகிறது. நார்மானிய அரசர் ஆற்றல் மிக்கவர்கள். எனவே அவர்கள் பேரவையின் பேரால் பெருமக்கள் கையோங்காமல் தடுத்து வந்தார்கள். இவ்வேலையில் பொதுமக்கள் சார்பு அரசர் பக்கமேயிருந்தது. எனவே அரசர் பெருமக்களை அடக்கும் முறைகளுள் ஒரு முறையாக நல்லாட்சியின் பெயரால் தம்மைப் பொது மக்களுடன் தொடர்பு படுத்தி வலுப்படுத்திக் கொண்டனர். எனவேதான் இவ்வரசரின் கடுங்கோன்மை (despotism) மக்களால் கொடுங்கோன்மை (oppression) ஆகக்கொள்ளப்படாமல் நலமுடைவல்லாட்சி (benevolent despotism) எனக் கொள்ளப்பட்டது. நார்மானிய ஆட்சியின் தொடக்கத்தில் பழைய ஆங்கில ஆட்சியில் செழித்தோங்கி நின்ற ஆங்கிலப்பெருமக்கள் நிலங்கள் பறிக்கப்பட்டு நார்மானிய அரசருள் முதல்வனான வெற்றி வீரன் வில்லியமுடன் வந்த நார்மானியப் பெருமக்களுக்குக் கொடுக்கப்பட்டு விட்டன. இதன் பயனாகப் பழைய ஆங்கிலப் பெருமக்கள் பொதுமக்களுடன் ஒன்றுபட்டுப்போக நார்மானியப் பெருமக்களே நார்மானிய ஆட்சியில் பெருமக்களாக விளங்கினர். எனவே இப்புதியவகைப் பெருமக்களை ஆங்கிலப் பொதுமக்கள் பெருமக்கள் என்ற முறையில் மட்டுமின்றி நார்மானியர் என்ற முறையிலும் வெறுத்தனர். மன்னர் பிறப்பால் நார்மானியராயினும் இப்பெருமக்களை ஒறுத்தடக்க முயன்ற |