இறுதியில் இரும்பையும் வழங்கக் கற்று மேம்பட்ட பிற்காலங்களை முறையே செப்புக் காலம், வெண்கலக்காலம், இரும்புக் காலம் என்று வரலாற்றறிஞர் கூறுவர். கற்கால மனிதன் தொடக்கத்தில் குகைகளில் தங்கி வேடர் வாழ்வு வாழ்ந்து வந்தான். தமிழிலக்கண அறிஞர் இந்நிலத்தில் அன்று முதல் இன்றளவும் வாழும் மக்கள் வாழ்வைக் குறிஞ்சி நில வாழ்வு என்றும், அம்மக்களைக் குறவர், வேடர் என்றும் வகுத்தனர். இந்நிலையிலுள்ளார் இன்றும் கற்கருவிகளும், நரிப்பல், புலிநகம், முதலிய அணிகளும், தோலாடையும், நரிவேட்டை முதலிய தொழிலும் உடையவராய் வாழ்கின்றனர். புதுக்கற்கால மனிதன் குகைகளிலிருந்து சற்று வெளிவந்து காட்டிலுள்ள மரங்களினடியில் வாழ்ந்தான். பிற்காலத்தில் இவர்கள் மரப் பட்டையும் கொடியும் தழையும் கொண்டு ஆடைகளும், கொப்பு, கிளை, தழை வேய்ந்து குடில்களும் கட்டி வாழ்ந்தனர். அவர்கள் ஆடு மாடுகளையும் நாய் முதலிய விலங்குகளையும் பழக்கி நிரைகாத்தும், பால், தயிர், நெய் எடுத்துண்டும் வாழ்ந்தனர். இத்தகைய வாழ்வே தமிழ் நூல்களில் கூறப்பட்ட முல்லை நில வாழ்வு. பண்டைய முல்லை நில வாழ்வுக்காலம் உண்மையில் இன்றைய முல்லை நிலத்தார் வாழ்வன்று. ஏனெனில் பிறநிலத்து வாழ்வின் கலப்பு அதிலில்லை. முல்லைநில மக்கள் குகைகளையோ மரங்களையோ குடில்களையோ உறைவிடமாகக் கொண்டிருந்தார்களானாலும் அவற்றில் நிலையாக வாழ்ந்திருக்க முடியவில்லை. விதையாமல் அறுத்து உண்பதும், வேட்டையாடி யுண்பதும் ஒரிடத்தில் நெடுநாள் நிலவமுடியா. காய் கனிகள் அருகிப் போனாலும், வேட்டை விலங்குகள் அருமையாய் |