பக்கம் எண் :

104தமிழகம்

போரில் சேனைத் தலைவர் காட்டும் வீரம் வியக்கத்தக்கது. தன் சேனை முரிந்தோடும் சமயமா யிருப்பின் சேனைத் தலைவன் தானே சேனைக்கு முன்னின்று எதிரி படை முழுவதையும் தானே தாங்கித் தடுத்து நின்று தன் படையாளரை உற்சாகப்படுத்திச் சண்டைக்குத் தூண்டுவான். தன் அரசனை மாற்றான் படை சூழக் காணின், யாண்டிருந்தும் படைத் தலைவர் ஓடோடியும் வந்து அவனை விடுவிப்பார். இருபுறமும் வாட் போரும் மற் போரும் வீரத்துடன் நடைபெறும். இவ்வாறாய சண்டையில் இருதிறத்தாரும் ஒக்க மடிதலுமுண்டு. சண்டை செய்யும் இரு வேந்தரும் மடிவரேல் அவர் மனைவியர் தீப்புகுவதும் வழக்கமாயிருந்தது.
     மாற்றார்மீது போர் தொடங்கும்போது, ஆனனைய அந்தணர் குழந்தை பெண் முதலியோரைப் போர்நிலத்தினின்றும் விலகுமாறு அறிவுறுத்தி, அன்னார் அவணிருந்து விலகிய பின்னர் அம்புமாரி சொரிவது தமிழ்வீரர்களது வழக்காயிருந்தது.
     இதனை,
"ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புல வாழ்நர்க் கருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம்மம்பு கடிவிடுதும் நும்மரண் சேர்மின்என
அறத்தாறு நுவலும் பூட்கை."
     என வரூஉம் புறப்பாட்டா னறிக.
"வெட்சி நிரைகவர்தன் மீட்டல் கரந்தையாம்
வட்கார்மேற் செல்வது வஞ்சியா--முட்கா
ரெதிரூன்றல் காஞ்சி யெயில் காத்த னொச்சி
யது வளைத்த லாகு முழிஞை-யதிரப்
பொருவது தும்பையாம் போர்க்களத்து மிக்கோர்
செருவென் றதுவாகை யாம்."

-பிங்கலம்