பக்கம் எண் :

112தமிழகம்

னுடைய வஞ்சித்தோலைப் போர்த்தலால் வஞ்சி யென்று பெயராயிற்று, குடுக்கையாக வளைத்தலாற் குடுக்கை யென்று பெயராயிற்று, வினைக்கிரியைகள் இடக்கையாற் செய்தலின் இடக்கை யென்று பெயராயிற்று, கரடிகத்தினாற்போலும் ஓசையுடைத்தாதலாற் கரடிகை யென்று பெயராயிற்று.

-அடியார்க்கு நல்லார்.

"தக்கை தண்ணுமை தாளம் வீணை
தகுணிச் சங்கிணை சல்லரி
கொக்கரை குடமுழ வினோ டிசை
கூடிப்பாடிநின் றாடுவீர்."

 -சுந்தரர்-தே.

      துளைக்கருவி-குழல். நரம்புக்கருவிகள்-ஆதியாழ் மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ் முதலிய நால்வகை யாழ்களுமாம். இவற்றுள் ஆதியாழுக்கு ஆயிரம் நரம்பும், மகரயாழுக்குப் பத்தொன்பதும், சகோடயாழுக்குப் பதினான்கும், செங்கோட்டியாழுக்கு ஏழுமாம். வீணை வடதிசையாரியர் தென்னாட்டுக்குக் கொண்டுவந்ததோர் இசைக்கருவி. யாழ்வகையில் ஒன்றேனும் இக்காலத்திற் காணப்படவில்லை. யாழுக்கு வேண்டிய மாட்டுநரம்புகளை நந்தனார் வமிசத்தார் கொடுப்பார் என்று பெரிய புராணத்திற் சொல்லப்படுகின்றது. யாழ் கை விரல்களினால் தடவி ஒலிக்கப்பெறும்.

11. நாடகத் தமிழ்

      "நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்-பாடல் சான்ற புலனெறி வழக்கம்" என்னும் தொல்காப்பியச் சூத்திரம் அக்காலம் நாடக நூல்கள் மிக்கு வழங்கினவென்பதை விளக்குகின்றது. சிலப்பதிகாரம் அரங்கேற்று காதையானும் அதற்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரையானும் பழைய இசைநாடங்களைக் குறித்த பல அரிய செய்திகள் அறியக்கிடக்கின்றன. நாடகத் தமிழ் அழிநிலை எய்திய இக்காலத்துப் பண்டைய நாடகச் சிறப்பினை முற்ற உணர்த்தும் நூல்கள் கிடைத்தில.