திருக்க வேண்டுமென்று கொள்ளுதல் தவறாகாது. மேள தாளங்களுக்கிசையுமாறு யாதேனுமொரு பாவினத்தில் கதையை யமைத்து அந்தக் கதையைப் பாடலோடோதி அபிநயித்தலே ஆதிகாலத் தமிழ்நாடக ரீதியென்று பல காரணங்களாலு மெண்ணுதற் கிடமுண்டு. அவ்வித ஆடல் விகற்பங்கள் எண்ணிறந்தன என்பதற்குப் பழைய காவியங்களுட் காணும் மாயோனாடல், சிவனாடல், குமரனாடல், இந்திராணியாடல், துர்க்கையாடல், சத்தமாதராடல், காமனாடல், வேலனாடல், வெறியாடல், பிசாசுக் கைக்கூத்து, குரவைக்கூத்து என்பன ஆதியான மொழிகளே சாட்சியாக நிற்கும், `மலடி மைந்தனுக்கு மாலை சூட்டல் போல இல்லாத நாடகத்துக்கு இத்தனை பெயர் வகித்தல் இயல்பன்று. மேலும் மேற்கூறிய கூத்து வகைகள் பற்பல காரணச் சேர்க்கையால் தமிழ்நாட்டில் மாய்ந்துபோயிருப்பினும் அழிந்தவைகட் கெல்லாம் அபயப் பிரதானங் கொடுத்து ஆதரிக்கும் எல்லைபோல் விளங்குகின்ற மலையாளத்துள் பல கிராமாந்தரங்களில் இன்னும் வழங்குகிற ஐவர்களி, பரிசைகளி, ஒட்டத்துள்ளல் முதலான பல்வேறு ஆடற் கதைகளைக் காண்பவர்க்குத் தமிழ்நாடு முழுவதும் பூர்வத்தில் வழங்கி வந்த நாடக விகற்பங்கள் இத்தன்மையனவென்று ஊகித்தல் ஒருவாறு கூடியதாகவே யிருக்கின்றது. ஆட்டக் கதை யென்பது மலையாளத்தில் நாடகங்களின் பெயராகவுமிருக்கின்றது. குறத்திப்பாட்டு உழத்திப் பாட்டு முதலிய பழைய பிரபந்த ரீதியாய்ப் பாடி யாடும் பாவிகற்பங்கள் இன்னும் பல தமிழ்நாட்டிலும் வில்லடிப் பாட்டு, உடுக்குப் பாட்டு முதலியன ஆட்டத்தோடு கதை விரித்தலுக்கே உரித்தானவை, நொண்டிச் சிந்து முதலிய பல விகற்பங்களும் பற்பல தாழிசைகளும் ஆடலுக்கு மிக ஏற்றன. ஆதலால் பழைய நாடகங்கள் வில்லுப்பாட்டு துள்ளற்பாட்டு முதலியவைபோல ஒருவர் தனியாயேனும், கும்மிப் பாட்டு பரிசைகளி முதலியன போலப் பலர் கூடியேனும் ஒரு கதையைத் தாள மேளங்களுடன் பாடி அபிநயித்துக் கூறும் ஒருவகைப் பாட்டாக இருந்திருக்க வேண்டுமென்று நிருணயிக்க வேண்டும். | | |
|
|