பக்கம் எண் :

120தமிழகம்

களினும் வேறுபாடின்றி ஒப்ப நிகழ்தலின், அவற்றை வேறு விதிக்கவேண்டாமையானும், இயலிசை நாடகமென்னும் மூன்றும் தமிழ் நிலத்துச் சிறிது வேறுபாடுடைமையின் அவற்றை விதிக்க வேண்டுதலானும் அது பற்றி அகத்தியத்துள் மூன்றுமே யெடுத்தோதினார்" என்றும் தொல்காப்பியச் சூத்திர விருத்தியின்கண் ஆங்காங்கு உரைத்திருக்கின்றனர்.
     "தமிழ் மொழியில் எல்லாப் பொருள்களும் இரண்டு திணைகளாகப் பகுக்கப் பட்டுள. பகுத்தறிவுடைய உயிர்களை உயர்திணைகளாகப் பகுத்து உயர்திணையில் ஆணுக்கு ஆண்பாலும், பெண்ணுக்குப் பெண்பாலும், பலருக்குப் பலர்பாலும், பகுத்தறிவற்ற விலங்கு, பறவை, நீர்வாழ்வன முதலிய உயிர்களையும், மரம், கொடி, செடி, பறவை நீர்வாழ்வன முதலிய உயிர்களையும் அஃறிணையாகப் பகுத்து, அவற்றுள் ஒன்றுக்கு ஒன்றன்பாலும், பலவற்றுக்குப் பலவின்பாலும் கூறப்படுகின்றன. தமிழில் விலங்கு, பறவை, மீன்களின் ஆண் பெண்களுக்கும் வெவ்வேறு பெயர் கூறப்படினும், அவைகள் பகுத்தறிவற்ற தாழ்ந்த சாதியிற் பட்டன வாதலால் அஃறிணையாகவே கூறப்பட்டிருக்கின்றன. ஆங்கிலம் முதலிய பாஷைகளில் சில அஃறிணை உயிர்களுக்கும், பொருள்களுக்கும் ஆண்பால் பெண்பால் கூறினும் அங்ஙனம் கூறப்பட்ட ஒன்றையே பல பால்களில் கூறுவதும், உயர்திணை ஆண்பாலுக்குப் பெண்பாற் பெயரும், பெண்பாலுக்கு ஆண்பால் ஒன்றன்பால் பெயரும் முறை பிறழ்ந்து கூறுவதும் இல்லை.
வடமொழியிலோ பால் வரம்பின்றிப் பலவாறு கூறுவதுண்டு. அவை வருமாறு:-
     1. பார்யா - பெண்பால் (ஒருமை)
     2. தாரா - ஆண்பால் (என்றும் பன்மை)
     3. களத்ரம் - ஒன்றன்பால்