பக்கம் எண் :

132தமிழகம்

மதுரைக் காஞ்சி உரையால் அகத்தியர் இராவணன் காலத்தவரென்று விளங்குகின்றது. இனிக் கடைச் சங்கப் புலவருளொருவராகிய மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் தாமியற்றிய மணிமேகலைக் காப்பியத்தில் காவிரிப்பூம்பட்டினத்திருந்த சுகந்தனென்னும் சோழமன்னன், பரசுராமன் தன்னோடு போர்குறித்து வருதலைத் துர்க்கா தேவியாலுணர்ந்து அவளேவற்படி அகத்திய முனிவரைச் சரணடைந்தா னென்றும், அவன் வேண்டிக்கொள்ள, அகத்தியர் காவிரியைப் பெருகச் செய்தாரென்றும் கூறுமாற்றால் அகத்தியர் இராமன் காலத்துத் தென்னாட்டில் உறைந்த செய்தி புலனாகின்றது.
     "ஆராய்ந்து பார்க்குங்கால் அகத்தியர் பரம்பரையொன்று இருந்ததென்றும் அப்பரம்பரையில் வந்தோரனைவரும் அகத்தியர் என்னும் பெயரையே வைத்துக்கொண்டனர் என்பதும், அவருள் ஒருவரே அகத்தியம் என்னும் நூலைச் செய்தவரென்பதும், சில உரைகளில் அகத்தியம் என்று காணப்படும் நூல் இயற்றிய அகத்தியனார் தொல்காப்பியனார்க்குப் பிந்தியவ ரென்பதும்........"

 -கா. நமச்சிவாய முதலியார்.

     அகத்தியரிடத்திற் கல்வி கற்றோர் பன்னிருவரென்றும், அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு படலமாகப் புறப்பொருட் பன்னிருபடல மியற்றினார்களென்றும், அவற்றுட் தொல்காப்பியர் வெட்சிப்படல மியற்றினாரென்றும், தொல்காப்பிய உரை புறப்பொருள் வெண்பாமாலை முதலியவற்றால் விளங்குகின்றன. ஆசிரியர் இளம்பூரணவடிகள் பன்னிருபடலத்துள் அடங்கிய வெட்சிப்படலம் தொல்காப்பியர் செய்ததன்றெனப் பல காரனங்கள் காட்டி மறுப்பர். ஆகவே, இளம்பூரண வடிகள் காலத்தில் பன்னிருபடலத்தை ஆக்கியோர்களைக் குறித்துச் சந்தேகம் இருந்ததென விளங்குகின்றது.