பக்கம் எண் :

134தமிழகம்

லுள்ள காப்பியம் என்னுஞ் சொல்1 காவியம் என்னும் வடசொல்லின் திரிபா மென்பது பிற்காலத்தார் கற்பனை.
     இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் இயற்றப்பட்ட தொல்காப்பியத்துக்கு எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னிருந்த இளம்பூரணர் பேராசிரியர் நச்சினார்க்கினியர் முதலியோர் எழுதிய உரைகளே காணப்படுகின்றன. பழைய உரைகள் ஒன்றையுங் காணோம். இடையிட்ட ஆயிரமாண்டுகளுக்குத் தொல்காப்பியம் உரையின்றி யிருத்தல் கூடுமோ? உரைகளிருந்தன. அவைகளெல்லாம் சாதிச் சண்டை சமயச் சண்டைகளால் அழிக்கப்பட்டன என்றே கொள்ளல்வேண்டும். வேறு காரணங் கூற வியலா. உரையாசிரியர்கள் பிற்காலத்து வழக்க ஒழுக்கங்களையும் மிருதிகளையும் பின்பற்றி உரைசெய்திருத்தலின், உரைகள் நூலிலுள்ள உண்மைப் பொருள்களைப் பலவிடங்களில் விளக்கா தொழிந்தன.
     சீவக சிந்தாமணி, பெரிய புராணம், திருமந்திரம், தேவாரம் முதலிய நூல்களில் இடையிடையே இடைச்செருகலாகப் பிற்காலத்துப் புலவர்கள் பல பாடல்களைப் பாடிச் சேர்த்திருக்கின்றனர். சில நூற்றாண்டுகளுக்கு முன் தோன்றிய நூல்களுக்கு நேர்ந்த கதி யிதுவாயின. சில ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் தோன்றிய நூலின் கதி எதுவாயிருத்தல் கூடும்? மரபியலுட் பல சூத்திரங்கள் இடைச்செருக லெனத் துணிவதற்குப் பல ஏதுக்கள் உண்டு. சிறப்புப்பாயிரத்திற் கூறப்பட்ட "ஐந்திரம்" தமிழுக் குரியதோ வடமொழிக் குரியதோ வென்று துணிதற் கிடமில்லை. சிலப்பதிகாரத்தில் ஓரிடத்தில் "விண்ணவர் கோமான் விழுநூல்" என ஒரு சைனநூல் சுட்டப்படுகின்றது. இதனை ஐந்திர வியாகரணம் என்பர் அடியார்க்கு நல்லார். புத்த சமயத்துக்குப் பின் தோன்றிய சைனமத

     1. காப்பியம் காவியமாயின், ஒருவர் புதிதாக ஒரு நூலை செய்து அதற்குப் பழைய நூல் என்னும் பொருளில் தொல்காப்பியம் எனப் பெயரிட்டார் எனக் கொள்ளவேண்டும். இது பொருத்தமற்றது.