அவரைத் தமிழர் திருந்தாத மொழியுடையவர் என்னும் பொருள்பட மிலேச்சர் என்னும் பெயரா லழைத்தனர். |
திருவாளர் பா. வே. மாணிக்க நாயக்கரவர்கள் வடசொல்லைக் குறித்துக் கூறுவது வருமாறு:- "வடசொல் ஆரியம், சமக்கிருதம் என்பன ஒரு பொருட் கிளவிகளாக அணித்தில் வழங்கிவருவது அறிவேன். ஆனால், தொல்காப்பிய காலத்தில் வடசொல் தவிர மற்ற இரண்டு சொற்களும் உலகில் எங்கேனும் இருந்தனவா? இருப்பின் தமிழ் கூறு நல்லுலகத்தில் வழங்கினவா? வழங்கின் மூன்று சொற்களும் ஒரு பொருளினவாக வழங்கினவா என்பன இன்னும் ஆராய்ந்து தெளிதற்குரியன. |
"தமிழில் வழங்கும் சொல்வகைகள் நான்கினுள் இயற்சொல் முதன்மையானது; வடசொல் கடைப்படியிலுள்ளது. வடசொல் லென்பது தமிழுக்குரிய சொல்லென்று நேராகவே பொருள் கொள்ள இடங்கொடுப்பது. உய்த்துப் பொருள்கோடல் வேண்டாதது. |
"அத்தகைய வடசொல் என்னுந் தமிழ்ச்சொல்தான் என்னை? என்கிற ஆராய்ச்சிக்குத் தொல்காப்பியத்தினின்றே ஆரியச் சொல்தான் அல்லது சமக்கிருதந்தான் என்று தெளிவிக்கக் கூடிய கூற்று எனக்கெட்டியவரையில் கிடைக்கவில்லை. |
"வடசொல் என்பதை வடக்குத் திசையிலிருந்து வந்தசொல் எனல் எளிதாயினும், அளவைக் கிணங்க நோக்கின் வடசொல்லென்பது திசைச்சொல்லென்பதனுள் ஒரு பகுதியாக அடங்கும். அவ்வாறாகத் திசைச்சொல்லென்பதையுஞ்சொல்லி, வடசொல் லென்பதையுஞ் சொல்லவேண்டியதன் பொருட்டு விளங்கவில்லை. வடசொல்லென்பதைத் திசைப்பொருளில் வழங்கியிருத்தல் பொருந்தாததாகத் தோன்றுகிறது. தொல்காப்பிய காலத்தில் வடக்கு என்னுஞ்சொல் எவ்வெப்பொருளில் வழங்கியதென்பது காட்ட நமக்கு நிகண்டுமில்லை அகராதியுமில்லை. |