பக்கம் எண் :

146தமிழகம்

2. ஆட்சியாளர் தமிழுக்குக் காட்டும் ஆதரவு

     அரசாட்சியாளருந் தமது வித்தியாசாலை மாணாக்கர்களுக்கு அவரவர் சொந்தப் பாஷையையும் கற்பிக்கும் விருப்புடையராய்த் தமிழ்ப் பிள்ளைகளுக்கும் அவர்களது சுயபாஷையாகிய தமிழை ஒரு அளவில் ஓதுவிக்கின்றனர். அது எவ்விதமென்றால் ஒருவனை நீந்தக் கற்பிக்கும் ஓர் ஆசிரியன் அவனை ஏரி, நதி, கிணறு, குளங்களில் இறங்கவிடாது, குடத்திற் றண்ணீரை மொண்டு சிறுகுழியில் விட்டுக் கால் மறையாத் தண்ணீரில் மாரடிக்கவிட்டாற் போலவாம். கடல்நீரெனில் உடல் கசியும் உப்புப் பூக்கும், குளநீரெனிற் சளிப்பிடிக்கும் தலைநோவுண்டாகும், ஆற்று நீரெனிற் சர்ப்ந்தீண்டும் முதலை பிடிக்கும் என்றவிதமே ஓரோர் நூலுக்கு ஓரோர் குற்றஞ் சாற்றி ஒன்றிலு மிறங்க விடாது ஒரு நூலில் ஒரு குடமும் இன்னொரு நூலிற் பின்னொரு குடமுமாக அள்ளிவைத்துப் படிப்பிக்கும் அவர்கள் முயற்சியாற் பெரும்பயன் விளைவதேயில்லை. நிகண்டு கற்று இலக்கிய வாராய்ச்சி இல்லாதவர்களுக்குச் சிற்றிலக்கணங்களை மாத்திரங் கற்பித்தலால், அன்னோர் வா வந்தானெனக் கொண்டு கா கந்தானென்றுஞ், சா செத்தானெனக் கொண்டு-தா தெத்தானெனவும் கூறுவார் போலத் தமிழைப் பலவாறு விபரீதப் படுத்துகின்றனர். இதனாற் றமிழுக்கு வருங் கெடுதியைக் குறித்து மிகவும் அஞ்ச வேண்டியிருக்கிறது.      (வீ.ப. உரை.)