பக்கம் எண் :


3, தமிழர் நாகரிகம்

1. நிலப்பாகுபாடும் திணைமக்களும்

     "தமிழர்கள் மிகவும் பழைய காலத்தில் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்னும் நான்கு நிலங்களில் வசித்துவந்தார்கள். மலையையும் மலைசார்ந்த இடத்தையும் குறிஞ்சி நிலம் என்றும், காட்டையும் காடுசார்ந்த இடத்தையும் முல்லை நிலமென்றும், வயலையும வயல் சார்ந்த இடத்தையும் மருதநில மென்றும், கடலையும் கடல்சார்ந்த இடத்தையும் நெய்தல் நிலமென்றும் தமிழர்கள் நிலத்தை நான்கு பகுதிகளாக வகுத்து வழங்கிவந்தார்கள். இவற்றால் பூமிக்கு நானிலம் என்னும் பெயர் தமிழில் வழங்குவதாயிற்று. குறிஞ்சி நிலத்தினும், முல்லை நிலத்தினும் சில பகுதிகள் சூரியனது வெப்ப மிகுதியால் தம்மியல்பிழந்து மணல் வெளியாக மாறுதலுமுண்டு, அதனைப் பாலை நிலமென்ப. இவர் இவர் இன்ன இன்ன நிலத்தில் உறைபவர் என்பதைக் குறிக்கும் பெயர்களுண்டு. அப்பெயர் ஆடவருக்கும் மகளிருக்கும் வெவ்வேறாக வழங்கின.
     "குறிஞ்சிநில மக்களுள் கல்வி, கேள்வி, வீரம் முதலியவற்றால் ஒப்புயர் வற்றவனாகிய ஆடவன், பொருப்பன், வெற்பன், சிலம்பன் எனப்படுவன். இவனே இந்நிலமக்களின் தலைவன். மற்ற ஆடவர் கானவர் எனப்படுவர்.
     "கல்வி முதலியவற்றால் அங்ஙனஞ் சிறந்த பெண் குறத்தி, கொடிச்சி யெனப் படுவாள், இவள் இந்நிலத் தலைவன் மனைக்கிழத்தி. மற்றைப் பெண்கள் குறத்தியர் எனப்படுவர்.
     "முல்லைநில மக்களுள் முற்கூறியாங்குச் சிறந்த ஆடவன் குறும்பொறைநாடன் தோன்றல் எனப்படுவன். இவன் இந்நிலமக்களின் தலைவன். மற்றை ஆடவர் இடையர், ஆயர் எனப்படுவர்.