1. அந்தணர் |
திருக்குறள் நீத்தார் பெருமை என்னும் அதிகாரத்துள், |
"அந்தண ரென்போ ரறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுக லான்" | |
என அந்தணரென்னும் பெயர் நீத்தாருக்குரித்தாகத் திருவள்ளுவநாயனார் கூறியிருக்கின்றனர். இதற்குப் பரிமேலழகர் விசேடவுரையில், "அந்தணரென்பது அழகிய தட்பத்தினையுடையாரென ஏதுப் பெயராகலின், அஃது அவ்வருளுடையார் மேலன்றிச் செல்லாதென்பது கருத்து" என்று கூறினார். |
"நூலே கரகம் முக்கோன் மணையே ஆயுங் காலை யந்தணர்க் குரிய" | |
என்னும் தொல்காப்பிய மரபியற் சூத்திரத்தானும் அந்தணரென்போர் துறவிகளே யென்பது இனிது புலனாகின்றது. |
`அந்தத்தை அணவுவோர் அந்தணர் என்றது வேதாந்தத்தையே பொருளெனக் கொண்டு பார்ப்பார்ழு என்றும், `அந்தணர் காஷாயம் போர்த்த குழாங்கள்ழு என்றும் நச்சினார்க்கினியர் உரைப்பர். |
"அந்தண்மை பூண்ட வருமறை யந்தத்துச் சிந்தைசெய் யந்தணர்" | |
என்னும் திருமந்திரமும் வேதாந்தத்தை அணவுவோர் அந்தணர் என்பதை உணர்த்திற்று. வேதாந்தத்தையே பொருளெனப் பார்த்தலின், பார்ப்பானென்னும் பெயரும் அந்தணர்க்குரியதாயிற்று. அந்தணர் தமிழ்மக்களல்லாத பிறரெனச் சிலர் கருதுவது பிழையான கோட்பாடாகும். |
"எறித்தரு கதிர்தாங்கி யேந்திய குடைநீழ லுறித்தாழ்ந்த கரகமு முரை சான்ற முக்கோலு நெறிப்படச் சுவலசைஇ வேறோரா நெஞ்சத்துக் குறிப்பேவல் செய்மாலைக் கொளைநடை யந்தணீர்." | (கலி-பாலை.) | |