என்னும் குறளால் சடைபுனைதலும் மழித்தலும் தாபதருக்கு இயல்பு என விளங்குகின்றது. மழித்தல் புத்த சமய வழக்குப் போலும்.
3. தமிழர் சமயம்
தமிழ்மக்கள் தொன்மை தொட்டு கைக்கொண்டு வரும் சமயம் சைவமேயாம். புத்த சமயம் தலையெடுப்பதன்முன் சைவ மதமே இந்தியா இலங்கை முழுமையும் பரவியிருந்தது. கி. மு. 543இல் வட தேயத்தினின்றும் இலங்கையை அடைந்த விசயனின் மதம் சைவம் என இலங்கைச் சரித்திரத்திற் படிக்கின்றோம். விசயனுக்குப் பின் இராச்சியம் எய்திய மன்னர்கள் தம்பெயரோடு சிவன் என்னும் பெயரையும் வைத்துச் சிறப்பித்தனர். விசயனுடைய வருகைக்குப் பன்னெடுங் காலத்துக்குமுன் நிகழ்ந்த பாரதம் இராமாயணத்திற் சொல்லப்படும் அருச்சுனன், அசுவத்தாமன், இராமன் முதலிய வீரர்கள் சிறந்த சிவபக்தர்கள் என அறிகின்றோம்.