கலித்தொகை, அகநானூறு, புறநானூறு முதலிய சங்க இலக்கியங்களிற் காணப்படும் கடவுள் வாழ்த்துக்களால் சிவ வழிபாடு தென்னாட்டில் வியாபித்திருந்ததென்பது வெளிச்சமாகின்றது.
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் பாலை என்னும் நிலங்களில் வாழ்ந்தோர் முறையே மாயோன் முருகன் வேந்தன் வருணன் காடுகிழாள் முதலிய கடவுளரை வழிபட்டனர். முருக வழிபாட்டைக் குறித்துத் திருமுருகாற்றுப்படை விரிவாகக் கூறுகின்றது.
முல்லை நிலத்துக் கோவலர் பல்லா பயன்தருதற்கு மாயோன் ஆகுதி பயக்கும் ஆபல காக்க வெனக் குரவை பல தழீஇ மடை கொடுத்தலின் ஆண்டு அவன் வெளிப்படு" மென்றார்.
"குறிஞ்சி நிலத்துக் குறவர் முதலியோர் குழீஇ வெறியயர்தற்கு வேண்டும் பொருள்கொண்டு வெறியயர்ப வாகலின், ஆண்டு முருகன் வெளிப்படு" மென்றார். நெய்தல் நிலத்தில் நுளையர்க்கு வலைவளந் தப்பின், அம்மகளிர் கிளையுடன் குழீஇச் சுறவுக்கோடு நட்டு ஆண்டுப் பரவுக்கடன் கொடுத்தலின் ஆண்டு வருணன் வெளிப்படும்." (நச் - உரை.)
இருக்கு முதலிய வேதங்களிற் சொல்லப்படும் விஷ்ணு இந்திரன் முதலியோரும் தமிழ்நாட்டு மாயோன் வேந்தன் முதலானோரும் ஒருவ ரல்லர். வருணன் தமிழ் நாட்டுக் கடவுள். இக்கடவுளைப் பிற்காலத்தில் ஆரியர் தம் கடவுளரில் ஒருவராகக் கொண்டனர்.1