பக்கம் எண் :

158தமிழகம்

என்னும் தொல்காப்பியச் சூத்திரம் தமிழ்மக்கள் கடவுளைச் சந்திரன் சூரியன் முதலிய ஒளியுடைப் பொருள்கள் வாயிலாக வழிபட்டார்கள் என்பதைப் புலப்படுத்துகின்றது. கொடிநிலை-சூரியன்; கந்தழி-ஒரு பற்றுக்கோடு மின்றித் தானேயாய்த் தத்துவங்கடந்த பொருள். வள்ளி-சந்திரன். கந்தழி என்பது பற்றுக்கோட்டை அழிப்பது என்னும் பொருளில் அங்கியைக் குறிக்கும் எனச் சில அறிஞர் கூறுகின்றனர்.

      கடவுளைக் குறிக்கும் தமிழ்ப்பெயர்களாகிய இறைவன், இயவுள், கடவுள் முதலிய சொற்கள் தமிழ்மக்கள் கடவுளைக் குறித்து எவ்வகையான விளக்கம் உடையவர்களாய் இருந்தார்க ளென்பதை வெளியிடுகின்றன.

     முருகக் கடவுள், ஆலமர் கடவுளுக்கும் (சிவன்) கொற்றவைக்கும் புதல்வன் என இலக்கியங்கள் அறைகின்றன. கொற்றவையே உமையாம்.

     முற்காலத்தில் மக்கள் இறைவனின் அடையாளமாகத் தறிகளை மரங்களின்கீழ் நிறுத்தி வழிபட்டு வந்தனரென்றும், அவ்விடங்களிலேயே பின் பெரிய கோயில்களெடுக்கப்பட்டன வென்றும், அதற்குச் சான்று, மூங்கிலடியில் கடவுள் வீற்றிருந்தமையால், திருநெல்வேலி வேணுபுரமென்றும், குறுகிய ஆலமரத்தடியிலும் குறுகிய பலாமரத்தடியிலும் இருந்தமையால் திருக்குற்றாலமென்றும், குறும்பலாவென்றும், முற்காலம் மதுரையில் கடம்பவனத்தடியில் இருந்தமையால் கடவுள் கடம்பவனேசுவரர் என்றும், நாவல்மரத்தடியில் இருந்தமையால் திருவானைக்கா சம்புகேசுவரமென்றும், தில்லை வனத்தில் இருந்தமையால் சிதம்பரம் தில்லை யென்றும் அழைக்கப்பட்டதுமன்றி அதுபோன்ற மகிழடி முதலான மரத்தடிகள் கடவுள் இருப்பிட மாயிற்றென்றுஞ் சொல்லப்படுகிறது.
     திருமந்திரம், தேவாரம், திருவாசகம், சித்தாந்தசாத்திரம் பதினான்கு முதலியவற்றுடன் காணப்படுகின்ற கோட்பாடுகளே தமிழர் சமயக்கொள்கைகளாகும்.