பக்கம் எண் :

தமிழர் நாகரிகம்173

கற்கள் சங்கு முதலியன தெற்கிலிருந்து கிடைப்பனவாகக் குறிப்பிட்டுள்ளன.

 -ஆக்ஸ்போர்ட் இந்திய வரலாறு பக்கம் 68, 69

7. கைத்தொழில்

      தமிழ் நாட்டின் வளனும் தொழிலின் முறைகளும் இந்நாட்டார் பண்டை நாளில் பிற நாட்டாரோடு செய்து வந்த வாணிகப் பெருக்கை நோக்குழி நன்கு புலனாகும். பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்-கட்டும் நுண்வினை கண்டவர்கள் நம் மக்கள். அக்காலத்தில் வழங்கி வந்த பட்டாடைகளின் பெயர் சிலப்பதிகாரத்திற் சொல்லப்படுகின்றன. அவற்றின் பெயர்கள் கேட்பதற்கு இன்பம் பயப்பனவாம். அவை வருமாறு:-
     "கோசிகம், பீதகம், பஞ்சு, பச்சிலை, அரத்தம், நுண்டுகில், சுண்ணம், வடகம், இரட்டு, பாடகம், கோங்கலா, கோபம், சித்திரக்கம்மி, குருதி, கரியல், பேடகம், பரியட்டக்காசு, வேதங்கம், புங்கர்க்காழகம், சில்லிகை, தூரியம், பங்கம், தத்தியம், வண்ணடை, கவற்றுமடி, நூல்யாப்பு, திருக்கு, தேவாங்கு, பொன்னெழுத்து, குஞ்சரி, தேவகிரி, கத்தூலம், இறஞ்சி, வெண்பொத்தி, செம்பொத்தி, பணிப்பொத்தி."
"நோக்கு நுழைகல்லா நுண்மைய பூக்கனிந்து
அரவுரி யன்ன யறுவை நல்கி"

(பொருநராற்றுப்படை)

     (உரை.) கண்ணிற்பார்வை, இஃது இழைபோன வழியென்று குறித்துப் பார்க்க வராத நுண்மை உடையவாய் பூத்தொழில் முற்றுப் பெற்றமையால் பாம்பின் தோலை யொத்த துகிலைக் கொடுத்து,

"காம்பு சொலித்தன்ன அறுவை"

     (உரை.) மூங்கிலாடையை உரித்தாலொத்த மாசில்லாத உடை.
"ஆவி யன்ன அவிர்நூற் கலிங்கம்"            (பெரும்பாண்)