பக்கம் எண் :

தமிழர் நாகரிகம்181

இன்றும், செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித் துடீஇ
பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி
ஒருமக னல்லது இல்லோள்
செருமுக நோக்கிச் செல்கென விடுமே" (புறம்:279)
     (இ - ள்) (ஒரு தாய்) முன்பு அவள் தகப்பன் யுத்த களத்தில் யானையை எறிந்து இறந்துபோயிருப்பவும், சமீபத்தில் நடந்த போரில் தன் கணவன் பகைவரைக் கொன்று தானும் மடிந்துபோ யிருப்பவும், இவற்றிற்காக மனந்தளர்வின்றிப் பகைவரின் போர்ப்பறை ஒலிப்பதைக் கேட்டு மகிழ்ச்சி மிகுந்து, தன் சிறுவனுக்கு ஆடை அணிவித்து, அவன் குடுமியை எண்ணெயிட்டுச் சீவிமுடித்து, தான் ஒரே புத்திரனை யுடையவளாயிருந்தும், சிறிதும் கலங்காது போர்க்களம் நோக்கிச் செல்கழு என்று அவனை அனுப்புகின்றாள். இச் செய்கையைக் கண்ட என் மனம் கெடுவதாக; இவள் துணிவு அஞ்சத்தக்கதாம்; பழைய வீரக்குடியிற் பிறந்தவளென்பது இவட்குத் தகுமென்பது; இதுபோலவே புறப்பொருள் வெண்பாமாலையுடையாரும் கூறியதாவது:
"கன்னின்றா னெந்தை கணவன் களப்பட்டான்
முன்னின்று மொய்யவிந்தா ரென்னையர்-பின்னின்று
கைபோய்க் கணையுதைப்பக் காவலன் பின்னோடி
எய்போற் கிடந்தானென் ஏறு."
     அஃதாவது:- கல்லிலே பொருந்தி நின்றான் என் தகப்பன்; என் கணவன் போர்க்களத்திலே பட்டான்; பகைவர் முன்னின்று எதிர்த்து யுத்தத்திலே விழுந்தார் என் தமையன்மார்; தன் சேனை அழியவுந் தான் அழியாமல் பின்னே நின்று, தன் கைசொன்று அம்பைச் செலுத்தப் பகையரசன் மேலே பாய்ந்து, பின் முள்ளம்பன்றி போலப் பட்டுக்கிடந்தான் என்னுடைய தலைவன்.
     இதிலும் அதிசயமான வீரத்தன்மையைப் புறம் 278 ஆம் பாட்டில் காண்கிறோம். அதன் தாற்பரியம் யாதெனில், வயதுமுதிர்ந்த ஒருதாய் தன் சிறுவன்