பக்கம் எண் :

182தமிழகம்

யுத்தத்தில் வலியழிந்து புறங்கொடுத் தோடினனென்று பலர் சொல்லக்கேட்டு, அவ்வாறு அவன் புறங்கொடுத்தோடினனாயின், அவன் பாலுண்டு வளர்தற்குக் காரணமாயிருந்த உறுப்புக்களை யறுத்திடுவேனென்று வாளைக் கையிற்கொண்டு போர்க்களம் புகுந்து, வீழ்ந்துகிடக்கும் பிணங்களைப் புரட்டித் தேடி வருபவள், இருதுண்டாய்க் கிடந்த தன் மகன் உடலைக் கண்டு, அவனைப் பெற்றபோதடைந்த மகிழ்ச்சியினும் அதிக மகிழ்சியடைந்தாளென்பதாம்.
     இவ் வீரம் அணைகடந்து வீராவேசமாய் வெளிப்பட்டது முண்டு. தமிழ்ப் பெண்கள் தம் வீரமக்கள் போர்க்குச் சென்று அங்கே சிறிது மானத்தாழ்வான செயலைச் செய்துவரின் அம் மக்களைச் சினந்து வெறுப்பர். ஒரு தாய் தன்மகன் பகைக்களிற்றின் மேலே வேலை யெறிந்து, அவ் வேலைத் திரும்பப்பெறும் ஆற்றலில்லாது வெறுங்கையனாய்ப் புறங்கொடுத்தது கண்டு,
"வாதுவில் வயிறே வாதுவல் வயிறே
நோகேன் அகந்தை நின்னீன் றனனே
பொருந்தா மன்னர் அருஞ்சம முருக்கி
அக்களத் தொழிதல் செல்லாய் மிக்க
புகர்முகக் குஞ்சரம் எறிந்த எஃகம்
அதன்முகத் தொழிய நீபோந் தனையே
அதனால், எம்மில் செய்யாப் பெரும்பழிசெய்த
கல்லாக் காளையை ஈன்ற வயிறே" (தகடூர் யா.)
     என்று கூறிமிகவும் வெறுத்தனள். இவ்வாறே தமிழகம் முன்னாளில் அறிவாற்றல் மிகுந்த வீரத் தாயார்களை உடையதாகி, அருமை பெருமைகொண்ட செயல்களுக்கு உரிய நிலைக்களமாயிருந்தது.

14 காவல் மரம்

     காவல்மரமென்பது பண்டைக்காலத்துத் தமிழரசர் ஒவ்வொருவரும் தங்கள் வெற்றிக் கறிகுறியாக ஒவ்வோர்