பக்கம் எண் :

தமிழர் நாகரிகம்185

     பேரன்பு பற்றி நிகழும் மரணமென்பது பொருள். நாயகனும் நாயகியும் ஓருயிரும் ஈருடலுமா யிருந்தாலன்றி இவ்வாறு ஒருங்கு உயிர்நீங்குந் தன்மை நிகழாது. இவ்வாறு கணவ னிறந்தபொழுதே உயிர் துறந்த உத்தம பத்தினி ஒருத்தி சிலப்பதிகாரத்துட் காணப்படுகின்றாள், ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் என்னும் பாண்டியன், கோவலன் என்ற வணிகனைத் திருடனென்று கருதி அநியாயமாகக் கொலை செய்வித்தபோது, கண்ணகி பாண்டியன் முன் சென்று வழக்காடி, அப்பாண்டியனது கொடுங்கோன்மையை அவனுக்குத் தன் சிலம்பைக் கொண்டு மெய்ப்பித்தனள். தான் செய்தது தவறென்றுணர்ந்த பாண்டியன் சிங்காசனத்திலிருந்தபடியே சோர்ந்து உயிர்விட்டான். அப்போது அவன் தேவியான பெருங்கோப்பெண்டு ஒரு கலக்கமுமின்றித் தானும்உயிர் துறந்தாள். சூரபதுமன் போரில் அழிவுற்ற செய்தி கேட்டவுடன் அவன் தேவி பதுமகோமளை உயிர்துறந்தனள் எனக் கந்தபுராணத்துள் கச்சியப்பர் கூறுவர். விதவை நோன்பினர், கணவனிறந்த பின் உயிர் தாங்கி நின்று, மறுபிறவியில் தம் நாயகருடன் வாழ்தற்கு நோற்றுப் பட்டினி முதலியவற்றால் உடம்பை வருத்துவோராவர். இதனை `நளியெரி புகாஅ ராயின் அன்பரொடு-உடனுறை வாழ்க்கைக்கு நோற்று உடம்புஅடுவர்ழு என்பதனால் அறிக. இவர்கள் இலை கிடந்த நீர்ச் சோற்றையும் எள்ளரைத்த விழுதையும் புளி கூட்டிச் சமைக்கப்பட்ட வேளையிலையையும் உணவாகக்கொண்டு கல்லழுந்தும்படி தரையிற் பாயின்றிப் படுத்து, உலக இன்பங்களை ஒழித்தவர். கைம்மையுற்றோர் கூந்தல் களைதலும் அக்கால வழக்காகத் தெரிகிறது.1

1, தொல்லை ஞான்றைச் செருவி லிவன்கை
வேல்வாய் வீழ்ந்தோர் பெண்டிர் கைம்மையின்
அறுத்த கூந்தற் பிறக்கஞ் சகடம்
பொறுத்தல் செல்லா பலமுரிந் தனவே,

 (தகடூர்யா)