பக்கம் எண் :

186தமிழகம்

17. மதுபானம்

     அந்தணர், வேளாண்மக்கள் என்னும் இரு பகுப்பினரை ஒழிந்த ஆண்களே யன்றிப் பெண்களும் மதுவருந்தினர். பனை தென்னைகளிலிருந்து இறக்கப்படும் கள்ளு, வறியோர், தொழிலாளர், போர்மறவர், பாணர் முதலியோரால் பானஞ் செய்யப்பட்டது. பழச்சாறு, அரிசி, தாதகிமலர் முதலியவற்றிலிருந்து இறக்கப்பட்ட வாசனையோடு கூடிய மதுவர்க்கங்களைச் செல்வர் அருந்தினர். யவன தேசத்தினின்றும் கப்பல் மார்க்கமாகக் கொண்டு வரப்பட்ட உயர்ந்த மதுவினை அரசர் பருகினார்கள். காரம் ஏறுதற்பொருட்டுக் கள்ளினை மிடாக்களிற் பெய்து, நிலத்துட் புதைத்து வைப்பது முன்னுள்ளோர் மரபு. மதுபானஞ் செய்தல் இழிதகவாக முன்னுள்ளோர் மதித்திலர்.

"தேட்கடுப் பன்ன நாட்படு தேறல்"

     என்றும்,
     "அரவு வெகுண் டன்ன தேறல்" என்றும் காரமேறிய கள்ளின் தன்மை புறநானூற்றிற் சொல்லப்பட்டது.
"பொற்றொடி மடந்தையர் புதுமணம் புணர்ந்து
செம்பொன் வள்ளத்துச் சிலதிய ரேந்திய
அந்தீந் தேறல் மாந்தினர் மயங்கி" (சிலப்பதிகாரம்)
"யவனர், நன்கலந் தந்த தண்கமழ் தேறல்
பொன்செய் புனைகலத் தேந்தி நாளும்
ஒண்டொடி மகளிர் மடுப்ப மகிழ்சிறந்
தாங்கினி தொழுகுமதி யோங்குவான் மாற" ( புறம்)
     `யவனரால நல்ல குப்பியிற் கொண்டுவரப்பட்ட குளிர்ந்த நறு நாற்றத்தையுடைய தேறலைப் பொன்னாற் செய்யப்பட்ட புனைந்த கலத்தின்கண்ணே யேந்தி நாடோறும் ஒள்ளிய வளையையுடைய மகளி ரூட்ட மகிழ்ச்சி மிக்கு இனிதாக நடப்பாயாக" என்பது இதன் உரை.