பக்கம் எண் :

தமிழர் நாகரிகம்189

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் பண்ணனைப் பாடிய 173-ஆம் புறப்பாட்டில் தன்னைப் பாணனாகக் கூறிக் கொள்ளுதலையும், கபிலர் முதலிய புலவர் பெருமக்களும் புறத்தில் தத்தம் பாடலுள் இங்ஙனமே கூறியிருத்தலையும் ஈண்டைக்கு நோக்கிக் கொள்க."

(நல்லிசைப் புலவர் பக் 60)

     "இவராற் சுட்டப்பட்டுள்ள கள்ளுண்டல், ஊனுண்டல் முதலிய வழக்குகள் இவர் காலத்துப் பெரிதும் தீதென ஒதுக்கப்பட்டவை யல்லவெனினும், அவற்றைப் பேரருட் புலமைவாய்ந்த இவரது ஒழுக்கமெனக் கொள்ளற்க"

 (ஷ பக். 175)

     கபிலர் ஒளவையார் முதலாயினோர் தம்மைப் பாணர் வரிசையில் வைத்து அரசரைப் பாடினமையின் பாண் குலத்துக்குரிய ஒழுக்கங்களைத் தமக்குரியனவாக வைத்துப் பாடினரே யன்றி, அவர் உண்மையில் கள்ளும் ஊனும் புசிப்பவர்க ளல்லரெனவும் கருதற் பாற்று.

19. உடை

     தமிழ்மக்கள் பழையநாளில் அணிந்திருந்த உடைகளைப்பற்றிச் சங்கநூல்கள் தெரிவிக்கின்றன. உடை அவ்வவ் வகுப்பாரின் செல்வத்துக்கும் தொழிலா தியவற்றுக்கும் பொருந்தப் பலவகைத்தா யிருந்தது. செல்வரும் வறிஞருமல்லாத நடுவகுப்பைச் சேர்ந்த ஆடவர்கள் தலையி லொன்றும் இடுப்பி லொன்றுமாக இரண்டு உடைகளை அணிந்து கொள்வர். மயிரை வெட்டாது வளர்த்து உச்சியிலோ கன்னத்திலோ கொண்டையாக முடிந்துகொள்வர். செல்வர் நீலச் சங்கு மணிகள் கோத்த பட்டிழையால் கொண்டையை அவிழாது பிணித்துவிடுவர். இவ்விழைகளின் இருதலைப்புகளும் குஞ்சங்கள் போலவுந் தொங்கும். போர்வீரர் பெரும்பாலும் இவ்வாறு கட்டுவர். கொண்டையில் மயிலிறகுகளைச் செருகுகின்ற வழக்கமும் இருந்தது. சிங்களவர் பழைய தமிழரிடமிருந்துதான் கொண்டை