பக்கம் எண் :

தமிழர் நாகரிகம்201

டங்களை அளித்தனர். எட்டிப் பட்டம்-இது எட்டிப் பூவைப் போல் பொன்னால் செய்து வணிகருக்குக் கொடுக்கும் பட்டம். ஏனாதிப் பட்டம்-சேனாபதியர் முதலாயினோர்க்கு அரசனால் அளிக்கப்படும் பட்டம். காவிதிப்பட்டம்-உழுவித்துண்போர்களிற் சிறந்தோர் அரசனாற் பெறும் பட்டம். ஏனாதிப் பட்டத்துக்கு மோதிர மளித்தல் வழக்கு. "ஏனாதி மோதிரஞ் செறிக்குந் திருவுடையா னொருவன்" என்பது இறையனா ரகப்பொரு ளுரை.

7. வெள்ளணி நாள்

     அரசர் தாம் பிறந்த நாளில் வெள்ளணி அணிந்து கொண்டாடுவர். அவர் முடிசூட்டுந் தினத்தையும பெருநாளாகக் கொண்டாடுதல் மரபு. இந்நாளில் அரசன் சிறைக்கோட்டத் துள்ளோரை விடுதலை செய்வான்.

8. சில பழக்க வழக்கங்கள்

     பாண்டியநாடு முத்துக்குப் பேர் போனது. `மார்கோபோலோழு என்பவர் முத்துக் குளிப்பைப்பற்றிக் கூறிய வரலாறு உண்மையா யிருக்கிறது. "சுந்தரபாண்டி தேவருடைய நாட்டில் முதற்றரமான பெரிய முத்துக்கள் காணப்படுகின்றன. அவை எப்படி எடுக்கப்படுகின்றன என்பதைப்பற்றிச் சொல்லுகிறேன். முத்துக்குளிப்போர் பெரிதும் சிறிதுமாகிய மரக்கலங்களைக் கொண்டு இலங்கைத் தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலுள்ள குடாவுக்குச் செல்கிறார்கள். அவர்கள் முதலில் பெத்திலார் (Bettlar) என்னும் ஓர் இடத்தை அடைகிறார்கள். பின்பு குடாவுக்குள் அறுபது மைல் தூரம் செல்கின்றனர். இ்ங்கே அவர்கள் தோணிகளை நங்கூரமிட்டுச் சிறிய வள்ளங்களில் ஏறிக் கொள்கின்றனர். அங்கே வியாபாரிகள் பல கூட்டங்களாகப் பிரிந்து செல்கின்றனர். அவர்கள் முத்துக் குளிப்பவர்களைச் சித்திரை மாதந் தொடங்கி வைகாசி மாதம் வரைக்கும் சம்பளத்துக்கு அமர்த்திக்கொள்கின்றனர்.