அங்குக் கிடைக்கும் முத்துக்களில் பத்திலொன்றை அரசனுடைய கடமையாகக் கொடுத்துவிடல் வேண்டும். முத்துக்குளிப்போரைப் பெரிய மீன்கள் துன்பஞ் செய்யாதிருத்தற் பொருட்டு அவற்றை மந்திரத்தால் கட்டுகின்றவர்களுக்கு இருபதில் ஒன்று கொடுக்கவேண்டும். மச்சங்களை மந்திரங்களாற் கட்டுபவர்கள் பிராமணர்களாவர். அவர்களுடைய மந்திரவலி பகல் நேரத்தில் மாத்திரம் பலிக்கும். இரவிலே மச்சங்கள் தங்கள் எண்ணப்படி திரியும்பொருட்டு மந்திரத்தை அவிழ்த்துவிடுகிறார்கள். முத்துக்குளிப்போர் சிறிய வள்ளங்களில் ஏறியவுடன் நாலு முதல் பன்னிரண்டு பாகத் தண்ணீருள் குதித்துச் சுளியோடி அடியிற் சென்று மூச்சடக்கக் கூடியவரையில் தங்குகிறார்கள் கீழே காணப்படும் முத்துச் சிப்பிகளைப் பொறுக்கி அரையிலே கட்டியிருக்கும் வலைபோன்ற ஒரு பைக்குட் போட்டுக்கொண்டு மேலே வந்து மறுபடியும் கீழே செல்கின்றார்கள். இவ்வகையாகப் பெருந்தொகையான சிப்பிகள் எடுக்கப்படுகின்றன.1 இச்சிப்பிகளிலிருந்து உலகம் முழுமைக்கும் செல்கின்ற முத்துக்கள் எடுக்கப்படுகின்றன. முத்துக்குளிப்பினால் அரசன் பெருந் தொகையான வருவா யடைகிறான். அரை சாக்கியோ (Saggio) நிறைக்கு மேற்பட்ட முத்துக்களை ஒருவராவது அவரது தேசத்துக்கப்பால் கொண்டு போதல் கூடாது. அவ்வகையான முத்துக்களைத் தான் பெற விரும்பியே அரசன் அவ்வகையான சட்டத்தை உண்டாக்கியிருக்கிறான். அவனிடத்திலுள்ள முத்துக்கள் எண்ணிக்கை யில்லாதன. பெரிய முத்துக்கள் அல்லது இரத்தினங்கள் வைத்திருப்பவர்கள் அவற்றைத் தன்னிடம் கொண்டுவந்தால் அது பெறும் விலையில் இரு மடங்கு தான் கொடுப்பதாக வருடத்துக் கொருமுறை நாடு முழுமையும் அறிவிக்கிறான். அவ்வகையான முத்துக்கள் இரத்தினங்கள் வைத்திருப்போர் அவற்றை அரசனிடத்தில் கொடுத்து விலையைப் பெற்றுக் கொள்கின்றனர். |
| 1. பெரிப்புளுஸ் என்னும் நூல் கொலைத்தண்டனை விதிக்கப்பட்ட மறியற்காரர் முத்துக்குளிக்கின்றனர் என்று கூறியுள்ளது. | | |
|
|