பக்கம் எண் :

204தமிழகம்

குறித்துக் கேட்பதற்கின்பமாகிய செய்திகள் கூறுகின்றான். "இந்த அரசன் ஐஞ்ஞூறு மனைவியரை உடையவனாயிருக்கிறான். அவனுக்குப் பல பிள்ளைகளுண்டு. அரசனைச் சூழ்ந்து பல பிரபுக்கள் இருக்கிறார்கள். அவர்கள் அவனுடன் கூடச் சவாரி செய்கிறார்கள். அவர்கள் எப்பொழுதும் அரசனுக்குச் சமீபத்தில் இருக்கிறார்கள். அரசாங்கத்தில் அவர்களுக்குப் பெரிய அதிகாரமுண்டு. அவர்கள் `ஆபத்துக்கு உதவிகள்ழு என்று அழைக்கப்படுவார்கள். அரசன் இறந்து எரியில் கொளுத்தப்படும்போது அவ்வாபத்துக்குதவிகளும் பிரேதத்தைச் சூழ்ந்து தீயில் விழுந்து இறந்துபோகின்றார்கள். இம்மையில் அரசனுக்குதவியாயிருந்த தாம் மறுமையிலும் அவனுக்கு உதவியாயிருக்க வேண்டுமென்று அவர்கள் சொல்லிக்கொள்கின்றனர்.
     மார்க்கோபோலோ பொது மக்களின் வாழ்க்கையைக் குறித்துக் கூறியிருக்கின்றார். "அவர்களுடைய நடைஉடை முதலியன அவனை ஆச்சரிய முறச் செய்தன. `மாபார்1ழு என்னும் மாகாணத்தி லுள்ளவர்கள் அரைக்குமேல் நிருவாணிகளாகவே யிருந்தனர். அதனால் அங்கே தையற்காரர்கள் காணப்படவில்லை. அரசன் முதல் வறியவர்கள் ஈறாக எல்லோரும் அரையில் ஓர் ஆடைமாத்திரம் தரித்துக் கொள்வர்."
     அக்காலத்தில் (சதி) உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்ததென்றும் கொலைக்குத் தீர்க்கப்பட்ட குற்றவாளிகள் தமது விருப்பத்தின்படி யாதேனுமொரு கோயிலுக்குத் தம்மைப்பலியாகக் கொடுத்துவிடலாமென்ற பிரமாணமிருந்ததென்றும், சனங்கள் பசுக்களை வணங்கினார்களென்றும், மாட்டு மாமிசம் அக்காலத்திற் புசிக்கப்படவில்லை யென்றும் மார்க்கோபோலோ கூறுகின்றான்.
     இந்நாட்டிலே உள்ளவர்கள் வீடுகளைச் சாணியால் மெழுகுவார்கள். பெரியவர்களும் சிறியவர்களுமாகிய எல்லோரும் தரையிலேயே இருப்பார்கள்.

     1. Between Quilon and Nellore.