பக்கம் எண் :

தமிழர் நாகரிகம்205

      இந்நாட்டவர் உடம்பை மறைத்துக் கொள்ளாது சண்டைக்குச் செல்கின்றனர். அவர்கள் ஈட்டியும் கேடயமும் வைத்திருப்பார்கள்.
     ஆண்களும் பெண்களும் தினம் இருமுறை குளிப்பார்கள். அப்படிச் செய்யாதவர்கள் தாழ்ந்தவர்களாகக் கருதப்பட்டார்கள். அவர்கள் வலது கையால் உணவை எடுத்து உண்பதே யன்றி, இடக்கையால் தீண்டமாட்டார்கள். இவ்வாறே நீர் பருகுகிறார்கள். ஒவ்வொருவரும் தனித்தனி ஒவ்வொர் பாத்திரம் வைத்திருக்கின்றனர். அவர்கள் நீர் அருந்தும்போது பாத்திரம் உதட்டில் முட்டுவதில்லை. எக்காரணத்தினாலாவது அவர்கள் நீரருந்தும் பாத்திரத்தை உதட்டில் முட்டவிடமாட்டார்கள். அன்னிய னொருவன் நீரருந்தப் பாத்திரம் வைத்திராவிட்டால் அவன் உண்ணும்படி நீரை கையில் ஊற்றுவார்கள்.
     அவர்கள் குற்றவாளிகளுக்குத் தண்டனை இறுப்பதில் மிகவும் கவனம் செலுத்தினார்கள். அவர்கள் மது உண்பதில்லை. மதுபானஞ் செய்பவர்கள் நம்பிக்கை நாணயம் உடையவராகக் கருதப்படமாட்டார்கள் என்று சட்டஞ் செய்திருந்தார்கள். கடன் கொடுத்தவன் கடன்காரனைப் பலமுறையும் பணத்தைக் கேட்க, அவன் கொடாவிட்டால், அல்லது பல கெடுக்கள் சொன்னால் அவன் ஒரு வட்டங் கீறிக் கடன்காரனை அதற்குள் நிறுத்தலாம். கடன் பட்டவன் கடன் கொடுத்தவனைத் திருப்திப் படுத்தியபின் அல்லது அவனுக்குத் தகுந்த பொறுப்புச் செய்த பின்தான் அவ்வட்டத்தினின்றும் வெளியே செல்வானாயின், அவனுக்குக் கொலைத் தண்டனை விதிக்கப்படுகின்றது.
     அவர்களில் சாமுத்திரிகா இலட்சணம் அறிந்தவர்கள் பலர் உண்டு. சகுனம் பார்ப்பதில் அவர்களுக்கு மிகுந்த நம்பிக்கை. பிள்ளை பிறந்தவுடன் அது பிறந்த மாதம் தேதி நாழிகை முதலியவற்றை எழுதி வைக்கிறார்கள். அவர்கள் செய்யும் கருமம் ஒவ்வொன்றும் சோதிட சம்பந்தமாயிருப்பதாலேயே இங்ஙனம் செய்கிறார்கள்.