இளந்திரையன்பாற் சென்று பரிசில் பெற்றா னொருவன், பரிசில் பெறுதற்கு விரும்பிய பெரும்பாண னொருவனை எதிர்ப்பட்டு அவ்வரசன்பால் ஏகுமாறு அவனை ஆற்றுப்படுத்தி இளந்திரையனின் இராசதானியாகிய காஞ்சிபுரத்துக்குச் செல்லும் மார்க்கத்தினைக் கூறுகின்றான். | "அவனுடைய நகரில் வழிப்போக்கர் அலறும்படி வெட்டி அவர் பொருள்களைக் கொள்ளை கொள்ளும் தீயோரில்லை. அவனுடைய காட்டில் இடியேறும் இடியாது, பாம்புகளும் தீண்டா, புலி முதலிய விலங்குகளும் தீங்கிழையா. அவ்வகையான காட்டகத்தே நீ பயமின்றி இளைப்பாறிச் செல்லலாம். அக்காட்டில் கவர்பட்ட பல வழிகள் உண்டு. அவ் வழிகளில் உமணர் உப்பேற்றிய வண்டிகளை ஓட்டிச் செல்வர். வண்டியின் அச்சு மத்தளம் போன்றது. அதன் இருமுனைகளிலும் சில்லுகள் மாட்டப்பெற்றிருக்கும். அச்சின் ஊடே ஏணிக்கால்கள் போன்ற இரண்டு மரங்கள் மாட்டப்பெற்றிருக்கும். அம்மரங்களில் நாட்டப்பட்ட தடிகளின்மேல் குடில்போல் பாயினால் வேயப்பட்டிருக்கும். வண்டிகளின் முன்புறத்தே கோழிக்கூடுகள் வைக்கப்பட்டிருக்கும். உரல் போன்ற உறிகள் வண்டிகளின் முன்புறத்தே உயரக் கட்டப்பட்டு அவைமீது நெல்லிக்காய், புளியங்காய் முதலியன ஊறவிட்ட பானைகள் வைக்கப்பட்டிருக்கும். | உமணப்பெண் கையிலே வேப்பிலையையும் பிள்ளையையும் உடையவளாய் வண்டியின் முன்புறத்தேயிருந்து எருதை முதுகிலே அடித் தோட்டுவாள். தழையினாற் கட்டிய மாலையை அணிந்த உமணர், பல சிறு துளைகளை யுடைய நுகத்திலே கட்டப்பட்ட எருதுகள் வண்டியைத் திருகாமலும் அச்சு முறியாமலும் பக்கத்தே காத்துக் கொண்டும் களைத்தாற் பூட்டுவதற்குப் பல எருதுகளை ஓட்டிக்கொண்டும் உப்பின் விலையைக் கூறிக்கொண்டும் கவர்பட்ட வழிகளாற் செல்வர். | | |
|
|