பக்கம் எண் :

228தமிழகம்

பானால் அவற்றை அடக்கியுள்ள திருவள்ளுவமாலை குறளரங்கேற்றப்பட்ட காலத்து இயற்றப்பட்டதாகாது.
     இனி இறையனார் களவியலுரையில் கடைச் சங்கப் புலவர் எண்மர் பெயர்கள் கூறப்பட்டிருக்கின்றன. இவ்வெண்மருள் திருவள்ளுவமாலையில் மூவர் பெயர் மாத்திரம் காணப்படுகின்றன, ஐவர் பெயரில்லை. அன்றியும் சிலப்பதிகாரத்தில் மகா மகோபாத்தியாயர் சாமிநாத ஐயரவர்களால் எடுத்துக் காட்டப்பட்ட பழைய அகவலொன்று கடைச்சங்கப்புலவரில் இருபத்தெழுவர் பெயர் கூறுகின்றது. அவற்றில் பதினேழு பெயர் திருவள்ளுவ மாலையில் இல்லை. இதனால் திருவள்ளுவமாலை பாடினவர் கடைச் சங்கப் புலவர்கள் என்று சொல்வதற்கிடமின்றாகின்றது.
     மேற்கூறியவற்றால் திருவள்ளுவமாலை கடைச்சங்க காலத்து நூலன்றென்பதும், அதிலுள்ள பாட்டொன்றேனும் அங்கே கூறப்பட்ட புலவராலேயே இயற்றப்பட்டதென்பதற்குத் தக்க ஆதாரம் இல்லை என்பதும் நன்கு போதரும். ஆயின், திருவள்ளுவமாலை எக்காலத்து யாரால் இயற்றப்பட்டதெனின், காலந்தோறும் திருக்குறளைப் பற்றிப் பாட்டுக்கள் பல புலவராலியற்றப்பட்டனவாக, பிற்காலத்து வந்த புலவரொருவர் அவற்றை யெல்லாம், அன்றேல், அவற்றுட் சிறந்தவற்றை மாத்திரம் ஒருங்கு சேர்த்து ஒழுங்குபடுத்தி ஒரு நூலாக்கியிருத்தல் வேண்டும். அவர் தாமும் சில பாட்டுக்கள் பாடிச் சேர்த்திருக்கலாம் அல்லது நூன்முழுவதையும் ஒரு புலவரே செய்துமிருக்கலாம். வள்ளுவமாலையில் வரும் பாட்டுக்கள் ஏறக்குறைய ஒரே விதமான நேரிசை வெண்பாக்களாக விருந்தாலும், அசரீரி சொன்னதாக வரும் பாட்டு அசரீரியே நேரே சொன்னதாயில்லாமல்,
"திருத்தகு தெய்வத் திருவள் ளுவரோ
டுருத்தகு நற்பலகை யொக்க-இருக்க
உருத்திர சன்ம ரெனவுரைத்து வானில்
ஒருக்கவோ வென்றதோர் சொல்"