பக்கம் எண் :

ஒழிபியல்231

10. இலவந்திகைப்பள்ளி

     அரசன் அரண்மனையில் வாசஞ்செய்வது மாத்திரமல்லாமல் சோலைகளின் மத்தியில் அமைக்கப்பட்டுள்ள குளிர்ச்சி பொருந்திய மாளிகையிலும் கோடைக்காலங்களில் வசித்தான். அம்மாளிகை இலவந்திகைப்பள்ளி என்று வழங்கப்பட்டது. அதன்கண் காற்றுவசதியும் நீர்வதியும் பொருந்த அமைக்கப்பட்டுள்ள மண்டபம் `நீராழி மண்டபம்ழு எனப்பட்டது.

11. அரசனைத் தெரிவுசெய்யும் நூதன முறை

     ஓர் அரசனின் மரணத்துக்குப்பின் இராச்சியபாரம் ஏற்பவர் இல்லாத பொழுதும், இராச்சியத்தின் உரிமைக்குப் பலர் வாதாடும்பொழுதும் பட்டத்துயானை வாயிலாக அரசனைத் தெரிவு செய்தலும் முன்னாள் வழக்கு என்பது,

"கழுமலத் தியாத்த களிறும் கருவூர்
விழுமியோன் மேற்சென் றதனால்-விழுமிய
வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால
தீண்டா விடுதல் அரிது"

(பழமொழி-26)

     என்னும் பழமொழி வெண்பாவால் அறியக் கிடக்கின்றது.

12. அரச தண்டனைகள்

     களவு, வியபிசாரம், இராசத் துரோகம் முதலியவற்றுக்குத் தகுந்த தண்டனை ஏற்படுத்தப்பட்டிருந்தது. உறுப்புக்களை வெட்டுதல், சிறையில் அடைத்தல், கொலை செய்தல் எனத் தண்டம் மூன்றுவகைப்பட்டது. இராசத் துரோகத்துக்குக் கொலையும், வியபிசாரத்திற்குக் கால் குறைத்தலும் முறையாகவிருந்தன.

"காணிற் குடிப்பழியாங் கையுறிற் கால் குறையும்."

(நாலடி-34)