ஒலித்தது. நீராட்டி அலங்கரிக்கப்பட்ட மணப்பெண்ணை ஏனைய பெண்கள் இமைகொட்டாது நோக்கினார்கள். கழுவப்பட்ட பூவிதழ்களாற் செய்யப்பட்ட வணங்குதற்குரிய தெய்வ வடிவம் வாகைப்பூவின் மேலும் அறுகம்புல்லின் மேலும் வைக்கப்பட்டது. அது பூ மொட்டுகளாலும் வெண்ணூலாலும் அலங்கரிக்கப்பட்டுப் புனிதமாகிய உடை தரிக்கப்பட்டது. மழைத்துளிகள் போன்ற மணல் சிந்தப்பட்ட பந்தலின்கீழ்த் தலைவி வீற்றிருந்தாள். ஆபரணப் பொறையினால் சோர்வடைந்த மணப்பெண்ணின் வியர்வை காயும்படி சுற்றத்தார் விசிறியினால் வீசி அவளைத் தலைவனுக்கு அளித்தார்கள்.
(அகம். 136)
பலர் உண்டபின்னும் உழுந்துடன் சமைக்கப்பட்ட சோற்றுக்குவியல் இருந்தது. நிரைத்த கால்களின்மேற் கட்டப்பட்ட பந்தலின்கீழ்ப் புதிய மணலைப் பரப்பினார்கள். வீட்டில் விளக்குகள் ஏற்றப்பட்டன. தலைவனும் தலைவியும் பூமாலைகளால் அலங்கரிக்கப்பட்டார்கள். நட்சத்திரங்கள் தீய பலனைக் கொடாத நல்ல வளர்பிறைப் பக்கத்தே விடியற்காலையில் சில பெண்கள் குடங்களைத் தாங்கவும், மற்றவர்கள் புதிய அகன்ற குடங்களை ஒவ்வொருவராக மாறவும், வயசின் முதிர்ந்த பெண்கள் பெரும் ஆரவாரஞ் செய்தார்கள். புதல்வரைப் பயந்த அழகிய ஆபரணங்களை யணிந்த பெண்கள் பூவிதழும் நெல்லும் இடப்பட்ட நீரை மணப்பெண்ணின் கரிய கூந்தல் பிரகாசிக்கும்படி பெய்து, `கற்பு நெறியில் நின்று கணவனுக்குத் துணையாய் வாழ்வாயாகழு என்று வாழ்த்தினர். மணச்சடங்கு நிறைவேறிய இராக்காலத்திலே அயலிலே உள்ள பெண்கள் கூடி மணமகளைப் புதிய ஆடை முதலியவற்றால் அலங்கரித்துத் தலைவனிடத்துய்க்க அவள் நாணத்தினாலொடுங்கினாள்.
(அகம். 86)
22. பேய்மகள்
காய்ந்த மயிரினையும், நிரை ஒவ்வாத பல்லினையும், பெரிய வாயினையும், கோபத்தாற் சுழலுகின்ற கண்ணினை