பக்கம் எண் :

240தமிழகம்

அலங்கரித்து விளங்குவார்கள். அவர்கள் ஆடவரைத் தம்முடன் ஏரிகளிலும் பொய்கைகளிலும் ஆடும்படி தூண்டுவார்கள். குறுந்தொகையில் ஒரு பரத்தையின் கூற்றாகக் கூறப்படுவது வருமாறு;-
     நாங்கள் ஆம்பலின் தழையைச் சூடி நீராடச் செல்வோம். அவள் (மனைவி) எங்களிடத்தில் அச்சங்கொள்வாளாயின் தானும் தனது சுற்றத்தாரும் எழினியின் படையைப்போல் அவனைக் காத்துக்கொள்ளட்டும். (குறுந்-80) விழாக்காலங்களில் அவர்கள் ஆடவரை மயக்குவதற்குக் கூடினார்கள். "ஆம்பல் இலையினால் அல்குலை அழகு பெற அலங்கரித்து விழாவுக்குச் செல்வேன். இந்தச் செழுமை மிக்க நாட்டின் தலைவன் காண்பானாயின், என்னை வரி்க்காமல் விடுதல் அரிதாகும்." (நற்-390). மனைவியர் தங் கணவரைப் பரத்தையர் மயக்கிக் கொண்டு செல்லாதபடி காத்தார்கள்.
"மடக்கண் தகரக் கூத்தற் பணைத்தோள்
வார்ந்த வாலெயிற்றுச் சேர்ந்துசெறி குறங்கிற்
பிணைய லந்தழைத் தைஇத் துணையிலள்
விழவுக்களம் பொலிய வந்துநின் றனளே
எழுமினோ வெழுமினெங் கொழுநற் காக்கும்"

(நற்-170)

     "அப் போதரவு பார்த்திருந்த பரத்தையர் குழலூதி யாழெழீ இத் தண்ணுமை யியக்கி முழவியம்பித் தலைமகனை இங்குக் கூத்துண்டென்பது அறிவிப்ப." என்னை?
`குழலெழீஇ யாழெழீஇத் தண்ணுமைப் பின்னர்
முழவியம்ப லாமந் திரிகை,
     என்று கூத்து நூலுடையாருஞ் சொன்னா ரென்பது. அவ்வகை அறிவிக்கப்பட்ட தலைமகன் நாம் இதனை ஒரு கால் நோக்கிப் போதுமென்று செல்லும். சென்றக்கால் அவர்கள் தங்கண் தாழ்விப்ப ரென்பது.

(இறை-அகப்பொருளுரை)