பக்கம் எண் :

ஒழிபியல்247

விளங்கும். பசிய பயிர்களின் இடங்கடோறும் முசுண்டைப்பூவும் முல்லைப்பூவும் உதிர்ந்து கிடக்கும். மருத நிலத்தில் கனிகடோறும் யானை நின்றால் மறையும்படியாக நெற்பயிர் பச்சைப்பசேலென வளர்ந்திருக்கும். தடாகங்களில் தாமரையும் நீலோற்பலமும் சேதாம்பலும் மலர்ந்து நறுமணம் வீசும். கழனிகளிலும் குளங்களிலும் மடுக்களிலும் வலைஞர் மீன்களைப் பிடித்து அவைகளைக் கொன்று குவிக்கும் ஆரவாரமும், கரும்பிற்கிட்ட ஆலையிடத்தோசையும், களை பறிப்பிடத்தோசையும், நெல்லரிகின்ற கிணையின் ஒலியும், ஆண்களும் பெண்களும் நீராடுகின்ற இரைச்சலும் ஆகாயத்தே சென்று முழங்கும். நெய்தலாகிய கானலினிடத்தே முத்தும் வளையும் பரதர் தந்த பல்வகைப் பண்டங்களும் விலை செய்யப்படும். யவன முதலிய தேயத்தினர் குதிரை முதலியவற்றைக் கொணர்ந்து கொடுத்து, வெள்ளுப்பும், தீம்புளியும், கொழுத்த மீன்களைத் துணித்து உப்பிட்டுலர்த்திய கருவாடுகளும் என்றிவை போன்றவற்றைக் கொண்டு போவர். குறிஞ்சிக்கும் முல்லைக்கும் இடையிலேயுள்ள பாலைநிலத்தில், ஆறலை கள்வர் வழிப்போவாரை வருத்தாவண்ணம் அரசனால் ஏவப்பட்ட வீரர், இலை வேய்ந்த குடிலில் மான்றோலாகிய படுக்கை யுடையராய்ப் பொருந்தி யிருப்பர்.
     "இவ்வைந்திணைப் பாங்கும் அழகுறப்பெற்றுப்பாடல்கள் சான்ற நன்னாட்டு நடுவில், திருவாலவாய், திருநள்ளாறு, திருமுடங்கை, திருநடுவூர் என்னும் நான்மாடக் கூடல் எனப் பெயர் பெற்ற மதுரைமா நகரமானது பூமாதின் அழகிய முகம்போல் பொலிவுற் றிருக்கும். இந்நகரைச் சூழ்ந்திருக்கும் மதில் கற்படைகள் பலவுளவாய் விண்ணுற ஓங்க, அதனைச் சூழ்ந்த அகழியானது நீலமணிபோலும் நீரையுடைத்தாய் மண்ணுற ஆழ்ந்திருக்கும். நெடிய நிலையினையும் திண்ணிய கதவினையுமுடைய வாயிலின்மீதமர்ந்த மாடமானது மேகமுலாவும் மலைபோல் ஓங்கியிருக்கும். மாந்தரும் மாவும் இடையறாமல் வழங்குதலால் வாயிலா