குமரிக்கண்டம் அழிவெய்தியபின் தென்னிந்தியாவின் தொடர்ச்சியாக இலங்கை சுமத்திரா யாவா முதலிய நாடுகளை உள்ளடக்கிய ஒரு பெருந் தீவு விளங்கிற்று. அதன்கண் நாவன் மரங்கள் செழித்தோங்கி வளர்ந்தமையான், அது நாவலத் (சம்புத்) தீவு என்னும் பெயரைப் பெறுவதாயிற்று. `குமரித்தீவுழு `குமரிநாடு; என்றும் அது வழங்கப்பட்டது. குமரிநாட்டின் வடக்கெல்லை விந்திய மலையாக விருந்தது. இமய மலையும் சிந்து கங்கைச் சமவெளிகளும் அக்காலத்தில் தோன்றவில்லை. ஆகவே குமரிநாடு அல்லது பழைய தமிழகம் ஆசியாக் கண்டத்தின் பகுதியாக இருக்கவில்லை. தெற்கே கிடந்த நிலப்பரப்புகளிற் பெரும்பகுதி கடலுள் மறைந்தது. அப்போது இமயமலையும் சிந்து கங்கைச் சமவெளிகளும் கடலாழத்தினின்றும் மேற்கிளம்பின. இமயமலைச் சாரல்களில் நீர்வாழ் உயிர்களின் என்புக்கூடுகள் காணப்படுகின்றன. அதனால் இமயமலை ஒரு காலத்தில் நீரின் மூழ்கிக் கிடந்ததெனத் துணியப் படுகின்றது. இமயமலையும் அதனைச் சார்ந்த நிலங்களும் மேற்கிளம்பிய பின்னும் விந்திய மலைக்கு வடக்கே நிலவிய கடல் முற்றாக மறைந்து விடவில்லை. அதன் ஒரு சிறு பாகம் வட இந்தியாவைத் தென் இந்தியாவினின்றும் பிரித்தது. நில நூலார் அதன் ஒரு பகுதிக்குக் கிழக்குக் கடலென்றும், மற்றைப் பகுதிக்கு இராசப்பட்டினக் கடலென்றும் பெயரிட்டனர். |
குமரி நாட்டின்கண் வடக்கே குமரியாறும் தெற்கே பஃறுளி (பல்+துளி) ஆறும் ஓடிக்கொண்டிருந்தன. பஃறுளியாறு வடிம்பலம்ப நின்ற பாண்டியனுக்கு உரியதாகப் புறம் 9ஆம் பாட்டால் விளங்குகின்றது. குமரியாறு கன்னியாகுமரிக்குத் தெற்கே சிறிது தொலைவில் இருந்திருத்தல் கூடும். |
முற்காலத்தில் இப்பொழுதைய இராசபுதானத்தின் பெரும்பகுதி தெற்கிலும் கிழக்கிலும் அராவலிமலைவரை கடலால் மூடப்பட்டிருந்தது. நிலநூலார் அக்கடலுக்கு இராசபுத்தானக் கடலென்று பெயரிட்டுள்ளார்கள். அப் |