பக்கம் எண் :

தமிழ்நாட்டின் தொன்மை நிலை53

பிராமி எழுத்துக்கள் தோன்றின. பிராமி எழுத்துக்களின் வளர்ச்சியே இன்றைய தமிழ் எழுத்துக்கள்.)
"கிரேத்த, உரோட்ஸ் (Rhodes), திராய், பாபிலோன் முதலிய நாட்டினரைப்போலவே தமிழர்களும் இறந்தவர்களின் உடலைத் தாழிகளி லிட்டுப் புதைத்தனர். இறந்தவர்களின் உடல், அல்லது அவர்களின் என்புகள் அடங்கிய தாழிகள் மத்தியதரைக் கடலின் வடக்குக்கரை நாடுகள் மெசத்பதோமியா, பாபிலோன், பாரசீகம், பலுச்சித்தானம், சிந்து, தென்னிந்தியா முதலிய இடங்களிற் காணப்பட்டன. தாழிகளுள் ஆடை, இறந்தவரின் ஆபரணங்கள், அவர் ஆயுதங்கள், இன்னும் அவரின் பிரியமான பொருள்கள் முதலியன வைக்கப்பட்டிருந்தன.
"பல கால்களுள்ள ஈமத்தாழிகள் சென்னைப் பிரிவிலுள்ள பெரம்பூரிலும் இன்னும் பல இடங்களிலும் காணப்பட்டன. இவை கிரேத்தா (Crete) வின் பல பாகங்களிற் காணப்பட்ட ஈமத்தாழிகளை ஒத்தன. கெரதோதசு ஆசிரியர், சின்ன ஆசியாவிலுள்ள இலைசியர் பழைய கிரேத்தா மக்களினின்றும் தோன்றியவர்களென்றும், அவர்கள் அங்குநின்றும் வரும்போதே `தெர்மிலேழு என்னும் தங்கள் குலத்துக்குரிய பெயரையும் உடன்கொண்டு வந்தனர் என்றும் கூறியுள்ளார். இலைசியரின் பழைய சாசனங்களால் அவர்கள் கிரிமிலி (Krimmili) என அழைக்கப்பட்டார்களென விளங்குகின்றது. இது கிரேக்கரின் உச்சரிப்பு முறையெனக் கெரதோதசு குறிப்பிட்டுள்ள பெயர்.
"தாழியில் வைத்துப் பிணங்களைப் புதைத்தல், பெயர்களின் ஒற்றுமை, கிரேத்தா எழுத்துக்களுக்கும் சிந்துவெளியிற் காணப்பட்ட எழுத்துக்களுக்குமுள்ள ஒற்றுமை முதலியவைகளால் பழைய திராவிட மக்கள் கிரேத்தா மக்களின் ஒரு கிளையினராகக் காணப்படுகின்றனர்."