பாண்டிநாடே சேர சோழ நாடுகளிலும் செந்தமிழ் ஆராய்ச்சிக்குரிய தெனக் கூறுவர் திராவிடப் பிரகாசிகைகாரர். சமயாசாரியர்களும் தமிழ்ப்புலவர்களும் பாண்டிநாட்டையே செந்தமிழ் நாடெனக் கூறுவர்.
தொல்காப்பியர் காலத்துச் செந்தமிழ் கொடுந்தமிழ் என்னும் வழக்கு இருந்ததற்குப் பிரமாணமில்லை. "செந்தமிழ் கொடுந்தமிழென்றிரு பகுதியில்" என்னும் சிலப்பதிகாரத்தால், அக்காலத்து, "செந்தமிழ் கொடுந்தமிழ்" என்னும் வழக்கு இருந்ததாகத் தெரிகின்றது.
"தாயைத்தள்ளை என்ப குட்ட நாட்டார்; நாயைஞமலியென்ப பூழிநாட்டார்" எனத் தொல்காப்பிய உரையிற் காட்டப்பட்ட உதாரணங்களால் தமிழகத்தின் பல பாகங்களில் அவ்வந்நாடுகளில் மாத்திரம் வழங்கும் சில சொற்கள் திசைச்சொற்கள் எனப்படும் எனத் தெரிகின்றது. குளிர், கரைதல், நுன், ஒள்ளியன், இதா, சிக்க, நீம் முதலிய சொற்களைத் திசைச் சொற்களெனக் காட்டுவர்